ARTICLE AD BOX
நாமக்கல்,
அசாம் மாநிலம் தேஜ்பூரை சேர்ந்தவர் கயாடு லோஹர். இவர் கடந்த 2021ம் ஆண்டு மனோரஞ்சன் நடிப்பில் வெளியான 'முகில்பேட்டை' என்ற கன்னட படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து, 2022ம் ஆண்டு வெளியான ஸ்ரீ விஷ்ணு நடித்த 'அல்லூரி' மூலம் தெலுங்கில் அறிமுகமானார். இதன்பின்னர் ஒரு மராத்தி மற்றும் மலையாளப் படத்தில் நடித்திருக்கிறார். கடந்த பிப்ரவரி 21ம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பிலும் அஸ்வத் மாரிமுத்துவின் இயக்கத்திலும் வெளியான திரைப்படம் தான் 'டிராகன்'. டிராகன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர் சமூக வலைதளங்களில் அதிகம் தேடும் நடிகையாக மாறிவிட்டார்.
தற்போது கயாடு, 'இதயம் முரளி' படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அடுத்ததாக அவர் தெலுங்கு பட இயக்குனர் கே.வி.அனுதீப்பின் 'பங்கி' படத்தில் நடிக்க உள்ளார். அவருக்கு மேலும் பட வாய்ப்புகள் குறைந்த வண்ணம் உள்ளது.
நாமக்கல் தனியார் கல்லூரியில் 25-ம் ஆண்டு ஆண்டு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சமீபத்தில் வெளியான டிராகன் படத்தில் நடித்த கதாநாயகி கயாடு லோஹர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார் . மேலும் சின்னத்திரை நடிகர்கள் கீர்த்தி, விஜய், சின்னத்திரை பாடகர்கள் அரவிந்த் ஸ்ரீனிவாஸ், பிரியா ஜெர்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் கூடியிருந்த மாணவ மாணவியர் மத்தியில் பேசிய கயாடு லோஹர் தமிழ் சினிமாவில் யாருடன் நடிக்க ஆசைப்படுகிறீர்கள் என்ற கேள்விக்கு நடிகர் விஜய் உடன் நடிக்க விரும்புவதாக தெரிவித்தார். மேலும் நடிகர் சிம்பு சாதாரண நடிகர் இல்லை எனவும், அவருக்கு நடிப்பில் பல பரிமாண முகங்கள் உள்ளது எனவும் தெரிவித்தார்.