“விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு எனது கட்சியில்..,” சீமான் ‘சாஃப்ட்’ பதில்!

3 hours ago
ARTICLE AD BOX
tvk vijay ntk seeman

சென்னை : நாதகவில் இருந்து சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து, கட்சியில் இருந்து விலகி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், கட்சியில் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள் தான் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

அதற்கு முன்னதாக ஜனவரி 28 அன்று, மேட்டூர் சட்டமன்றத் தொகுதியின் துணைத் தலைவர் ரகு உட்பட 500 பேர், சேலம் மேற்கு தொகுதி நிர்வாகிகள் பால்பண்ணை ரமேஷ், மெய்யனூர் செல்வமூர்த்தி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் நாதகவில் இருந்து விலகினர்.

கடலூர் கிழக்கு மாவட்ட நாதக தலைவர் மகாதேவன் கட்சியின் கொள்கைகள் குறித்து தனது அதிருப்தியை தெரிவித்து விலகினார். அதைப்போல, பிப்ரவரி 19 அன்று, மாநில கொள்கை பரப்புச் செயலாளர் தமிழரசன், சீமான் செயல்பாடுகள் மற்றும் கருத்து ஏற்புடையதாக இல்லை என கூறி விலகினார். விலகிய உறுப்பினர்களில் பலர் திமுகவில் இணைந்தனர். மேலும் சிலர் த.வெ.க கட்சியில் இணையவுள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

இதனையடுத்து, இராணிப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் பல கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் ” விஜய் கட்சி தொடங்கிய பிறகு நா.த.க. கூடாரம் காலியாகிறதா..? என்பது போல கேள்விகேட்டார். அதற்கு பதில் அளித்த சீமான் “அப்படியெல்லாம் இல்லை…தம்பி விஜய் கட்சி தொடங்கியதற்கு முன்பிலிருந்து என்னுடைய கட்சிக்கு பலரும் வந்திருக்கிறார்கள்…விலகி இருக்கிறார்கள்.

கட்சி என்றாலே வருவதும் போவதும் என்பது வழக்கமான ஒன்று தான். என்னுடைய கட்சியில் இருந்து பலர் விலகுவது மக்களுக்கும் நாட்டிற்கும் எதுவும் பிரச்சினை இருக்கிறதா? இல்லை எனவே எதற்காக இந்த மாதிரி கேள்வி? இந்த மாதிரி கேள்விகளை எல்லாம் கேட்காமல் வேறு உருப்படியான கேள்விகள் இருந்தால் கேளுங்கள்” எனவும் சீமான் கூறினார்.

எப்போதும் சீமான் தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு சத்தமாகவும் ஆக்ரோஷமாக பதில் அளிப்பார். ஆனால், இந்த முறை பழைய படி சத்தம் போட்டு பேசாமல் நிதானமாகவும் சாந்தமாகவும்  விஜய் கட்சி தொடங்கிய பிறகு நா.த.க. கூடாரம் காலியாகிறதா என்கிற  கேள்விக்கு சீமான் பதில் அளித்துள்ளார்.

Read Entire Article