ARTICLE AD BOX

Vijay polytics: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். நடிகராக மட்டுமே இருந்தபோது அரசியல்வாதிகளால் பல சிக்கல்களை சந்தித்தார் விஜய். அவரின் தலைவா படம் 2 நாட்கள் ரிலீஸ் ஆகவில்லை. சர்கார் படம் வெளியானபோது தியேட்டரில் இருந்த பேனர் மற்றும் போஸ்டர்களை ஒரு கட்சியை சேர்ந்தவர்கள் சேதம் செய்தனர்.
விஜய் சந்தித்த பிரச்சனைகள்: மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி பற்றி ஒரு வசனம் பேசியதற்காக விஜயின் முழு பெயர், அவரின் அடையாள அட்டையை தோண்டி எடுத்து டிவிட்டரில் போட்டு ஜோசப் விஜய் என மத ரீதியாக அட்டாக் செய்தார் ஹெச்.ராஜா . மாஸ்டர் பட ஷூட்டிங்கிற்காக நெய்வேலியில் இருந்த விஜயை ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கே போய் வருமான வரித்துறை அதிகாரிகள் காரில் அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். இதிலெல்லாம் கடுப்பான விஜய் நாமும் அரசியலுக்கு வர வேண்டும் என முடிவெடுத்தார்.

தவெக மாநாடு: விக்கிரவாண்டியில் தவெக மாநாடு நடந்தபோது அங்கு சுமார் 8 லட்சம் பேர் கூடினார்கள். இதெல்லாம் சில அரசியல் கட்சிகளுக்கு கிலியை ஏற்படுத்தியிருக்கிறது. ஒருபக்கம், பிரபல அரசியல் வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிஷோர் விஜய் கட்சிக்கு ஐடியாக்களை கொடுத்து வருகிறார். அதோடு, 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக கட்சி 15 சதவீத ஓட்டுக்களை பெறும் எனவும் சொல்லியிருக்கிறார்.
கட்சி துவங்கிய கமல்: விஜய்க்கு முன்பே கட்சி துவங்கியவர் கமல். விஜய்க்கு முன்பே என்பதை விட ரஜினிக்கு முன்பே கட்சி துவங்கினார். ஆனால், அவர் எதிர்பார்த்த வரவேற்பு மக்களிடம் கிடைக்கவில்லை. சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல் ‘ரசிகர்கள் வேறு.. வாக்காளர்கள் வேறு என்பதை தெரிந்துகொண்டேன். 20 வருடங்களுக்கு முன்பே நான் அரசியலுக்கு வந்திருந்தால் நான் இருக்கும் இடம் வேறாக இருந்திருக்கும்’ என சொன்னார். ரசிகர்கள் வேறு. வாக்காளர்கள் வேறு என்பதை அவர் விஜய்க்கு சொன்ன செய்தியாகவே பலரும் கருதுகிறார்கள்.
ஜெ. நிகழ்ச்சியில் ரஜினி: ஒருபக்கம், மறைந்த முதல் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஜெ.வின் அண்ணன் மகள் தீபா போயஸ்கார்டனில் நடத்திய நினைவேந்தல் நிகழ்ச்சியில் திடீரென ரஜினி கலந்துகொண்டார். இதன் மூலம் தன்னுடைய ஆதரவு அதிமுகவுக்கு என ரஜினி மறைமுகமாக சொல்வதாக பலரும் நினைக்கிறார்கள்.

ரஜினி - சீமான் சந்திப்பு: அரசியலுக்கு வருவேன் என 25 வருடங்களுக்கும் மேல் கம்பு சுத்தி கடைசியில் ஹெல்த் சரியில்லை என சொல்லி எஸ்கேப் ஆன ரஜினிக்கு விஜயின் அரசியல் வளர்ச்சி மீது பொறாமை என விஜயின் ரசிகர்கள் கருதுகிறார்கள். ஏற்கனவே சீமானை வீட்டிற்கு வரவழைத்து சில ஆலோசனைகளை சொன்னார். அதன்பின்னர்தான் சீமான் பெரியாரை திட்ட துவங்கினார். எனவே, இரண்டையும் இணைத்து பலரும் கருத்து கூறி வருகிறார்கள்.
ஒருபக்கம் திமுகவுக்கு நெருக்கமாக இருக்கும் கமலும் விஜய்க்கு எதிராக பேசியிருக்கிறார் என சிலர் சொல்கிறார்கள். எனவே, விஜய்க்கு எதிராக கமலும், ரஜினியும் இறங்கி இருக்கிறார்கள் என பார்க்கப்படுகிறது. ஆனால், கமல் பேசியதற்கும் ரஜினி போயஸ்கார்டன் போனதற்கும் விஜயின் அரசியலோடு தொடர்பு இல்லை என்றும் சிலர் சொல்கிறார்கள்.
இதையெல்லாம் தாண்டி அரசியலில் விஜய் வெற்றி பெறுவாரா என்பதை 2026 சட்டமன்ற தேர்தல் தீர்மானிக்கும்!...