ARTICLE AD BOX
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. திமுக வெற்றி செல்லும்.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்ற நிலையில், அந்த வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், திமுக வேட்பாளர் வெற்றி செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த புகழேந்தி மறைந்ததை தொடர்ந்து, அந்த தொகுதிக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா சுமார் 67 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அவரது வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி, தேசிய மக்கள் சக்தி கட்சியின் ராஜமாணிக்கம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட தான் வேட்புமனு தாக்கல் செய்ததாகவும், ஆனால் தனது மனு முறையாக பரிசீலனை செய்யப்படாமல் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், தனக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி, அன்னியூர் சிவா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அன்னியூர் சிவா மனுவை ஏற்றுக்கொண்டு, அவருக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.
இதனை அடுத்து, அன்னியூர் சிவாவின் வெற்றி உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva
Edited by Siva