ARTICLE AD BOX
அனுபவம்தான் வாழ்க்கை என்றால் என்ன என்பதை நமக்கு கற்றுத் தருகிறது. குடும்பத்தில் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழ்க்கை நடத்துவதுதான் வீட்டில் நம்முடைய மதிப்பை உயர்த்தும். வெளி உலகத்திலும் அன்பை விட மற்றவர்களுடன் இருக்கும் புரிதலில்தான் நம் மதிப்பு உயரும்.
அன்பை விட புரிதலுக்குதான் மதிப்பு அதிகம். வாழ்வில் நாம் எண்ணியது அனைத்தையும் அடைந்துவிட்டோம் என்ற ஆணவத்தில் ஆடவும் வேண்டாம், எண்ணியது ஒன்றுமே நடைபெறவில்லையே என்று வாடவும் வேண்டாம். மாற்றம் ஒன்றே மாறாதது. எனவே இந்த நிலையும் ஒருநாள் மாறும்.
வாழ்வில் உயரவேண்டும் என்றால், நம் மதிப்பு கூடவேண்டும் என்றால் நம்மை நம்பும் மனிதர்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும். கிடைத்த வாழ்க்கையை சந்தோஷத்துடன் அனுபவித்து வாழ கற்றுக் கொள்ள வேண்டும். பிறரை ஏமாற்றி பிழைப்பதோ, பொய் சொல்லி நடப்பதோ மேன்மையைத் தராது. உழைப்பினால் உண்டாகும் உயர்வுதான் நிரந்தரம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அதுவே நமக்கு சமூகத்தில் மதிப்பை உண்டாக்கும்.
குடும்பத்தில் ஒருவரை ஒருவர் மதித்து நடப்பதும், நட்பு பாராட்டுவதும், புரிதலுடன் கூடிய அன்போடு வாழ்வதும், மற்றவர்களின் உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுத்து நடந்து கொள்ளவும் செய்தால் வீட்டில் சுமுகமான சூழ்நிலை உருவாகும். நம்மைப் பற்றிய உயர்ந்த எண்ணங்களும் ஏற்படும். 'விட்டுக்கொடுத்து போனவர்கள் யாரும் வாழ்வில் கெட்டுப் போனதில்லை' என்பார்கள். அன்றாட வாழ்வில் முடிவுகளை எடுக்கும் பொழுது வீட்டில் உள்ள மற்றவர்களின் கருத்துக்களையும் கருத்தில் கொள்வது நம்மை மரியாதைக்குரியவராக நடத்தும்.
தம்மைச் சுற்றி உள்ளவர்களைப் பார்த்து தான் குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள். எனவே அவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருப்பது அவர்கள் நல்ல சூழலில் வளர உதவும்.
எது சரி, எது தவறு என்பதில் தெளிவு இருக்கும். தெளிவற்ற மனம் முரண்பாடுகளை உருவாக்கலாம். எனவே வீட்டில் உள்ளவர்கள் ஒருமித்து முடிவெடுப்பது குழந்தைகளை குழப்பம் அடையாமல் இருக்க வைப்பதுடன், வீட்டு பெரியவர்களான நம்முடைய மதிப்பும் மரியாதைக்கும் கூடும். இது ஒரு ஆரோக்கியமான குடும்பத்தை பராமரிக்க எளிதாக இருக்கும்.
குடும்ப மதிப்புகள் சமூகத்தை பாதிக்கும். அவை நல்லவிதமான பாதிப்பை அதாவது நல்ல விதமான தாக்கத்தை ஏற்படுத்துவது நமக்கும், சமுதாயத்திற்கும் நல்லது. நம்மைப் பார்த்து வளரும் குழந்தைகள் பின் நாட்களில் நம்முடைய செயல்களையே பின்பற்றி வாழ்வார்கள். எனவே இந்த தலைமுறையில் உள்ள பெரியவர்கள் முக்கியமான முடிவுகளை எடுக்கும் பொழுது மற்றவர்களின் எண்ணங்களையும், தேவைகளையும் கருத்தில் கொள்ளவேண்டும்.
சமுதாயத்தில் மதிப்புடன் வாழ அதாவது பிறர் மதிக்க வாழவேண்டுமென்றால் நேர்மையை கடைப்பிடிக்க வேண்டும். இதன் மூலம் இவர் நம்பகமானவர், இவரை நம்பலாம் என்று மற்றவர்கள் நம்மை நம்பி நம் செயல்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். நம் பேச்சுக்கு மதிப்பிருக்கும்.
அதேபோல் குடும்பத்திற்காக நேரத்தை ஒதுக்குவதும், அவர்களின் எண்ணங்களுக்கும், கருத்துக்களுக்கும் மதிப்பளிப்பதும் என சிறந்த உதாரணமாகத் திகழ்ந்தால் நம்முடைய மதிப்பு மற்றும் மரியாதை வீட்டிலும் சரி சமுதியத்திலும் சரி உயர்ந்து நிற்கும். வாழ்க்கையின் கிட்டத்தட்ட எல்லா அம்சங்களிலும் திறமையையும், உழைப்பையும், நேர்மையையும் வெளிப்படுத்த தயங்க வேண்டாமே!