மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 75| அழுத்தமான முத்திரை படைத்த ’கீதா பிரபாகர் ஐபிஎஸ்’

3 hours ago
ARTICLE AD BOX
Published on: 
06 Feb 2025, 8:00 am

(தொடரின் முந்தைய அத்தியாயங்களை, இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்...)

மலையாள நடிகையான ஆஷா சரத் அடிப்படையில் ஒரு நடனக் கலைஞர். பரதநாட்டியம், மோகினியாட்டம், குச்சிப்புடி, கதகளி போன்ற நடனக் கலைகளில் தேர்ச்சி பெற்றவர். மலையாளத் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கத் துவங்கியதின் மூலம் புகழின் வெளிச்சம் கிடைத்தது. பிறகு மலையாளத் திரைப்படங்கள். 2013-ல் வெளியான திரிஷ்யம் திரைப்படத்தில்  முதன் முதலாக காவல்துறை அதிகாரி பாத்திரத்தை ஏற்றார். ‘கீதா பிரபாகர் ஐபிஎஸ்’ என்கிற  இந்தக் கேரக்டர் அவருடைய பயணத்தில் ஓர் அழுத்தமான முத்திரையாக அமைந்து நிறைய பாராட்டுக்களையும் விருதுகளையும் ஈட்டித் தந்தது. 

மலையாளத்தில் பெரிய வெற்றியைப் பெற்ற திரிஷ்யம் பிறகு பல மொழிகளில் மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் தமிழ் மற்றும் கன்னட மொழியின்  ரீமேக் திரைப்படங்களில் ‘கீதா பிரபாகர் ஐபிஎஸ்’ பாத்திரத்திற்காக இதே ஆஷா சரத் தேர்வு செய்யப்பட்டார். இதிலிருந்து இந்த கேரக்டரின் வலிமையையும் அதை சிறப்பாக கையாண்ட ஆஷாவின் நடிப்புத் திறமையையும் நம்மால் உணர முடியும். 

கீதா பிரபாகர் ஐபிஎஸ் - வில்லியா, பாசமிகு தாயா?

கீதா பிரபாகர் ஐபிஎஸ் பாத்திரம் எப்படிப்பட்டது? இவர் ஒரு வில்லியா? நிச்சயம் இல்லை. காவல்துறையில் உயர் பொறுப்பை வகிப்பவர். கறாரானவர். தன்னுடைய தொழிலில் திறமையானவர். ஆனால், மகன் மீதுள்ள மிகையான பாசம்தான் இவரை கண்மூடித்தனமானவராகவும் மூர்க்கமானவராகவும் மாற்றுகிறது. தாயன்பிற்கும் கடமை உணர்ச்சிக்கும் இடையே தத்தளிப்பவராக படம் முழுவதும் தன்னுடைய கேரக்டரை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார் ஆஷா. ஓர் அப்பாவிக் குடும்பம் துன்புறுத்தப்படுவதில் இவருக்கு மனமார விருப்பமில்லையென்றாலும் தன்னுடைய மகனை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டுமென்கிற வெறி அவரது கண்களை மூடி மறைக்கிறது. அதற்காக தன் அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்துகிறார். 

இவருடைய கணவர் பிரபாகர். நல்லவர். நேர்மையானவர். கீதா பிரபாகரின் மனச்சாட்சியைப் போலவே கூடவே இருந்து எச்சரிக்கை செய்து கொண்டேயிருப்பவர். இந்தக் கேரக்டரை அனந்த் மகாதேவன் மிக அருமையாக கையாண்டிருந்தார். இந்திய அளவில் சிறப்பான நடிகர்களை பட்டியிலிட்டால் அதில் முன்வரிசையில் இடம்பெறக்கூடிய அளவிற்கு நடிப்புத் திறன் கொண்டவர். 

வீட்டிற்குள் நுழையும் வேண்டாத விருந்தாளி

‘பாபநாசம்’ திரைப்படத்தில் சுயம்புலிங்கத்தின் குடும்பத்திற்குள் ஒரு ‘வேண்டாத விருந்தாளி’ நுழைந்து விபத்து ஏற்பட்டு அதன் தடயங்களை சுயம்புலிங்கம் தன்னுடைய நடைமுறை அனுபவத்தால் திறமையாக மூடி மறைத்துக் கொண்டிருக்கிறான். அந்த ஓட்டைகளை தர்க்கபூர்வமாக மெழுகிப் பூசுவதற்கான தயாரிப்புகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறான். 

இந்தச் சமயத்தில்தான் இறந்து போன இளைஞனின் குடும்பம் நமக்கு அறிமுகமாகிறது. ‘கீதா பிரபாகர் ஐபிஎஸ்’ என்கிற பலகை வெளியில் மாட்டப்பட்டிருக்கிற பெரிய பங்களாவின் உள்ளே காமிரா பயணிக்கிறது. 

பணிரீதியான சந்திப்பிற்காக பிரபாகர் வெளியே செல்ல தயாராகிக் கொண்டிருக்கும் போது, மேஜையில் உள்ள மகனின் புகைப்படம் கண்ணில் படுகிறது. அவன் வீட்டுக்கு வந்தே சில நாட்கள் ஆகின்றன என்கிற விஷயம் அவருடைய மூளையில் அழுத்தமாக உறைக்கவே மொபைலில் மகனை அழைக்கிறார். அது அணைக்கப்பட்டிருக்கிற தகவல்  மட்டும்தான் பதிலாக ஒலிக்கிறது. 

இப்போதுதான் கீதா பிரபாகர் ஐ.ஜியின் என்ட்ரி. காவல்துறை சீருடையில் கம்பீரமாகத் தோற்றமளிக்கிறார். ஆஷா சரத் அழகானவர் என்றாலும் சில கோணங்களில் அவரது முகம் கடுமையானதாகவும் சிடுசிடுப்பானதாகவும் இருக்கிறது. இத்தகைய முகவெட்டு உள்ளவர்களைத்தான் வில்லன்களின் பாத்திரத்திற்கு தேர்ந்தெடுப்பார்கள். ‘வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்’ என்கிற வடிவேலுவின் லாஜிக் போல, அழகான தோற்றத்தில் இருப்பவர்கள் நல்லவர்கள், சற்று கடுமையான முகத்துடன் இருப்பவர்கள் கெட்டவர்கள் என்கிற பொதுப்புத்தி சார்ந்த கற்பிதத்தை சினிமாவும் பிரதிபலிக்கிறது. அசலான வாழ்க்கையில் இது தலைகீழாக இருப்பதை பல சமயங்களில் பார்க்கிறோம்.

பாசம் கண்ணை மறைக்கும் அம்மா - கண்டிப்பான அப்பா

“எங்க போய் தொலைஞ்சான் உன் மகன்?” என்று பிரபாகர் எரிச்சலுடன் கேட்பதுடன் அவர்களின் உரையாடல் ஆரம்பிக்கிறது. ஒரு பணக்காரக் குடும்பத்தில் உள்ள spoiled child பற்றி அவர்களின் பெற்றோர்கள் எப்படி உரையாடுவார்களோ அந்த லட்சணத்தில் அந்த உரையாடல் பயணிக்கிறது. மகனுக்கு செல்லம் கொடுத்து கெடுக்கும் அம்மா. அதைக் கண்டிக்கும் அப்பா. காவல்துறை அதிகாரியாகவே இருந்தாலும் மகனின் தவறுகளை கண்டிக்கத் தவறும் பாசமான அம்மா. ஆனால் மகனைக் கண்காணித்து அவனுடைய குளறுபடிகளை எச்சரித்துக் கொண்டேயிருக்கும் அப்பா. 

“நீங்க இப்படி அவனை கண்காணிச்சிட்டே இருக்கறதாலதான் அவன் வீடு தங்கறதில்ல” என்று அந்தப் பழியையும் தூக்கி கணவர் மீதே போடுகிறார் கீதா. என்றாலும் மகன் ஏன் இன்னமும் வீடு திரும்பவில்லை என்கிற கவலை அவருக்குள்ளும் ஏற்படுவதை காட்சியின் நிறைவு ஷாட் பிரதிபலிக்கிறது. 

தன்னுடைய அலுவலகத்தில் யாரிடமோ சிரித்துப் பேசி விட்டு தொலைபேசியை வைக்கும் கீதாவிற்கு மேஜையில் இருக்கும் மகனின் புகைப்படம் கண்ணில் படுகிறது. புன்னகை உறைந்து கவலையுடன் மகனுடைய மொபைலுக்கு அழைத்துப் பார்க்கிறார். மிகச் சரியாக அதே சமயத்தில் சுயம்புலிங்கம் இன்னொரு மொபைல் போனில் சிம் கார்டை மாற்றுகிற தருணமாக அது அமைகிறது. அழைப்பிற்கு பதில் இல்லாததால் எரிச்சலுடன் போனை வைக்கிறார் கீதா.

ஆரம்பிக்கிறது பூனை - எலி ஆட்டம்

படிப்பறிவு இல்லாத ஆனால் நடைமுறை ஞானமுள்ள சுயம்புலிங்கம் என்கிற அப்பாவியான தந்தைக்கும், காவல்துறை அதிகாரி என்னும் பொறுப்பில் உள்ள அதிகார வலிமை மிக்க பெண்மணிக்கும் இடையிலான பூனை - எலி ஆட்டம் ஆரம்பமாகிறது. இந்த அதிகார முரண்தான் இந்த ஆட்டத்தை சுவாரசியமாக்குகிறது. 

மொபைல்  சிம்கார்டின் மூலம் மகன் சென்றிருக்கும் பாதையை அறிய முயல்கிறார் கீதா. ஆனால் அது சுயம்புலிங்கம் உருவாக்கி வைத்திருக்கும் தப்பித்தலுக்கான பாதை என்பது அவருக்கு அப்போது தெரியாது. இந்தச் சூழலில் மகனுடைய வாகனம் ஒரு குவாரியில் கண்டெடுக்கப்படுவது கீதாவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஆனால் சடலம் கிடைக்காதது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. 

இது தன்னுடைய சொந்த வழக்கு என்பதால் அதிகாரபூர்வமல்லாத வகையில் ரகசிய விசாரணையை மேற்கொள்கிறார் கீதா. காவல்துறையின் சக்தியைப் பயன்படுத்துகிறார்.  ஒருவகையில் இது அதிகார துஷ்பிரயோகம். என்றாலும் மகன் காணாமல் போன வழக்கு என்பதால் ரகசியத்தைப் பின்பற்ற முயற்சிக்கிறார். திக்குத் திசையே தெரியாமல் இருளாக இருக்கும் இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக பெருமாள் என்கிற கான்ஸ்டபிள் வருகிறான். ‘கீதாவுடைய மகனின் காரை சுயம்புலிங்கம் ஓட்டிச் சென்றதை கண்ணால் கண்ட சாட்சியாக’ உறுதியான நிலைப்பாட்டுடன் இருக்கிறான். இந்தச் சாட்சியம்தான் கீதாவிற்கு ஒரு புதிய வெளிச்சத்தை அளிக்கிறது. 

தப்புக் கணக்கு போடும் கீதா - தர்க்க அறிவால் சாதிக்கும் சுயும்புலிங்கம்

சுயம்புலிங்கத்திற்கும் காணாமல் போன இளைஞனுக்கும் என்ன தொடர்பு? இந்தக் கோணத்தில் வழக்கின் விசாரணை பயணிக்கும் போது சுயம்புலிங்கத்தின் மகள் கலந்து கொண்ட கேம்ப்பில் காணாமல் போன இளைஞனும்  கலந்து கொண்ட லிங்க் கிடைக்கிறது. எனவே விசாரணையின் வேகத்தை தீவிரப்படுத்துகிறார் கீதா. 

படிப்பறிவு இல்லாத சுயம்புலிங்கம் என்கிற கிராமத்தானிடமிருந்து மிக எளிதாக உண்மையை கொண்டு வந்து விடலாம் என்று தப்புக் கணக்கு போடுகிறார். இந்த வழக்கின் ஓட்டைகளை எல்லாம் மிகத்திறமையாக முன்பே அடைத்திருக்கிறான் சுயம்புலிங்கம். சினிமா மீது அவனுக்கு இருக்கிற தீவிரமான ஆர்வம் இந்தக் கற்றலை தந்திருக்கிறது. 

சுயம்புலிங்கத்தின் தடுப்பு ஏற்பாடுகள் மிகத் திறமையாக அமைந்திருந்தாலும் காவல்துறை அனுபவமுள்ள கீதாவிற்கு அவன் மீது பலத்த சந்தேகம் ஏற்படுகிறது. அவன் எதையோ மறைக்கிறான் என்று தீர்மானமாகத் தெரிகிறது. பெருமாளின் சாட்சியம் இதற்கு உறுதுணையாக இருக்கிறது. ஆனால் சுயம்புலிங்கத்திற்கு ஆதரவாக அனைத்தும் நடக்கவே கீதா எரிச்சல் அடைகிறார். கோபத்தில் வெடிக்கிறார். சமநிலை தவறுகிறார். பிள்ளைப் பாசம். மகன் குறித்து ஒரு சிறிய துப்பாவது கிடைத்து விடாத என்கிற ஏக்கம். 

ஆஷா சரத்தின் அற்புதமான நடிப்பு

சுயம்புலிங்கத்தின் தர்ககச்சுவரை தகர்ப்பதற்காக கீதா மேற்கொள்ளும் அத்தனை முயற்சிகளும் தோற்றுப் போகின்றன. ஒரு கட்டத்தில் கீழ்நிலை அதிகாரிகளின் முன்னிலையிலேயே அவருக்கு கண்கலங்குகிறது. ஒரு மேலதிகாரி இப்படி அப்பட்டமாக தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தக்கூடாது. அதிலும் காவல்முறை பதவியில் உள்ளவர் இதைச் செய்யவே கூடாது. இது அவருக்கு பலவீனமான அம்சமாக மாறி விடும். இதை பிரபாகர் உணர்கிறார். எனவே தன் மனைவியை தனிமையில் அழைத்துச் சென்று “இந்த விசாரணை சரியான திசையில்தான் செல்கிறதா?” என்கிற முக்கியமான வினாவை எழுப்புகிறார். 

’கீதா பிரபாகர் ஐபிஎஸ்’
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்: குறும்பும் சேட்டையுமாக ‘வேட்டையன்’ ‘பாட்டரி’ பகத் பாசில்!

அதுவரை கம்பீரமான காவல்துறை அதிகாரியாக மிடுக்குடன் விசாரணையை நடத்திக் கொண்டிருந்த கீதா, ஒரு தாயாக மாறி மனம் உடைந்து கணவரின் தோளில் சாய்ந்து அழுகிறார். “எல்லா சாட்சியங்களும் அவனுக்கு சாதகமாகவே இருக்கட்டும். ஆனா எனக்கு நல்லா தெரியும். அவன் பொய் சொல்றான். போலீஸ் அனுபவத்துல என்னால இதை நிச்சயமா சொல்ல முடியும். ஆனாலும் எப்படி நிரூபிக்கறதுதான் தெரியலை. அதனாலதான் போலீஸூம் நீதிபதியும் சொந்த வழக்கை தானே விசாரிக்கக்கூடாதுன்னு சொல்றாங்க போல. சமநிலை தவற விடக்கூடிய சாத்தியம் நிறைய இருக்கிறது” என்கிற தொனியில் கீதா அழுகிற காட்சியில் ஆஷா சரத்தின் நடிப்பு மிக இயல்பாக அமைந்திருக்கிறது.

கடுமையான போலீஸிற்கும் பாசமான அம்மவாவிற்கும் இடையிலான தத்தளிப்பு

சாட்சியங்கள் மட்டுமல்லாது மற்ற  காவல்துறை அதிகாரிகளுக்கு கூட சுயம்புலிங்கம் அப்பாவியாக இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. ஆனால் சுயம்புலிங்கத்தின் மீது தனிப்பட்ட விரோதம் கொண்டிருக்கிற பெருமாள் மட்டும் எதிரியாக நிற்கிறான். எனவே பெருமாளையே தனது ஆயதமாக பயன்படுத்துகிறார் கீதா. சுயும்புலிங்கத்தின் குடும்பத்தை வரவழைத்து அடித்து விசாரிக்கவும் துணிகிறார். ஏவப்பட்டதும் பெண் குழந்தைகள் உட்பட அனைவரையும் துவைத்து எடுக்கிறான் பெருமாள்.  தேர்ட் டிகிரி டிரீட்மெண்ட். “கீதா.. இது அபாண்டம். கடவுளுக்கே அடுக்காது. நிறுத்து” என்று பிரபாகர் இடைமறித்தாலும் கீதாவின் ஆவேசம் அடங்கவில்லை. 

’கீதா பிரபாகர் ஐபிஎஸ்’
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 68 |பாசமுள்ள தகப்பனின் பாத்திரத்தில் ’ராதா ரவி’

ஒரு கட்டத்தில் சுயம்புலிங்கத்தின் தந்திரங்களையும் அவன் ஏற்படுத்தி வைத்திருக்கும் புனைவுக் கதைகளையும் கீதா கண்டுபிடிக்கிறார். ஆனாலும் மகன் மீதுள்ள கண்மூடித்தனமான பாசம், சமநிலை தவறுதல், சுயம்புலிங்கத்தின் அசாதாரணமான திறமை போன்ற காரணங்களால் இந்த வழக்கை உடைக்க அவரால் முடிவதில்லை. அவருடைய அவசரமான, அநாவசியமான நடவடிக்கைகள் அவருக்கே எதிர்விளைவுகளை ஏற்படுத்துகின்றன. 

தன் குடும்பத்தின் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளை பொதுவுலகத்திற்கு அம்பலப்படுத்துகிறான் சுயம்புலிங்கம். ‘இனிமேல் சுயம்புலிங்கத்தின் குடும்பத்திற்கு எவ்வித இடையூறும் தரக்கூடாது’ என்று நீதிமன்றம் இந்த வழக்கில் நுழைகிறது. தான் நினைத்தது போல் சுயம்புலிங்கம், ஒரு முட்டாள்தனமான பட்டிக்காட்டான் அல்ல என்பதை கீதா முழுமையாக உணர்ந்து கொள்கிறார். தன் தோல்வியை பகிரங்கமாக ஒப்புக் கொள்கிறார். அதன் எதிரொலிதான் அவருடைய ராஜினாமா. 

கிளைமாக்ஸ் காட்சியில் ஆஷா சரத்தின் அசர வைக்கும் நடிப்பு

படத்தின் இறுதிக்காட்சி. காணாமல் போன தன் மகனைப் பற்றி சிறிய தகவலாவது கிடைக்குமா என்று பெற்றோர்கள் கண்ணீருடன் சுயம்புலிங்கத்தின் முன்னால் நிற்கிறார்கள். ‘அவன் எங்காவது உயிரோடு இருக்கிறானா.. இல்லையா.. ஒரு சின்ன நம்பிக்கையிலாவது வாழலாமா?’ என்று ஒரு தந்தைக்கேயுரிய துயரத்தோடு பிரபாகர் கேட்க, குற்றவுணர்ச்சியில் கையெடுத்துக் கும்பிடுகிறான் சுயம்புலிங்கம். 

இந்த நீளமான  காட்சியில் கீதாவிற்கு வசனமே கிடையாது. வெறும் எக்ஸ்பிரஷன்கள்தான். இந்த சீனை ஆஷா சரத் கையாண்டிருக்கும் விதம் பிரமிக்கத்தக்க அளவில் இருக்கிறது. படம் முழுவதும் அவரிடமிருந்த கம்பீரமும் கடுமையும் மிடுக்கும் முற்றிலும் காணாமல் போய், மகனை இழந்து தவிக்கும் ஒரு தாயாக கூனிக்குறுகி கண்ணீருடன் நிற்கிறார். கோரிக்கை, இரஞ்சுதல், பரிதவிப்பு, ஏக்கம் என்று அத்தனை உணர்வுகளையும் வசனமே அல்லாமல் முகபாவங்களின் மூலமாகவே வெளிப்படுத்தி விடுகிறார். 

’கீதா பிரபாகர் ஐபிஎஸ்’
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் | துள்ளலான நடிப்பில் இதயத்தை கவர்ந்த ‘தீபக்’ ரஜினிகாந்த்!

பாபநாசம் படத்தின் மிக முக்கியமான பலம் ‘கீதா பிரபாகர்’ பாத்திரம். அந்தப் பாத்திரத்தின் கடுமைதான் நாயகனின் மீது அனுதாபம் உருவாக்குவதற்கான முக்கியமான காரணியாக இருக்கிறது. வெறும் கடுமையான காவல் அதிகாரியாக அல்லாமல், கனிவான தாயையும் அதில் கலந்து எழுதியிருப்பதுதான் இந்தப் பாத்திரத்தை வித்தியாசமாக காட்டுகிறது. இப்படியொரு சவாலான பாத்திரத்தை மிகத் திறம்பட கையாண்டு மறக்க முடியாததொன்றாக மாற்றியிருப்பதில் ஆஷா சரத்தின் பங்களிப்பு குறிப்பிடத் தகுந்தது.

Read Entire Article