வாராங்கல் பத்மாட்சி கோவில்

3 days ago
ARTICLE AD BOX

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த வாராங்கல் நகரில் ஸ்ரீ பத்மாட்சி மலைக்கோவில் உள்ளது. காக்கத்திய மன்னர்கள் ஆட்சியில் கி.பி. 12-ம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட சமண சமய (ஜெயின்) மலைக்கோவிலே, பத்மாட்சி திருக்கோவிலாகும். காக்கத்தியர்கள் சமண மதத்தில் இருந்தபோது, இக்கோவில் உருவாக்கப்பட்டது.

இப்பகுதி முழுவதும் சமண மதத்தவர்கள் நிறைந்து வாழ்ந்து வந்தனர். இப்பகுதி 'பாசாதி' என்றே அழைக்கப்பட்டது. இக்கோவிலை 'பத்மாட்சி குட்டா' என்றும், 'அம்மா' என்றும், இப்பகுதிவாழ் மக்கள் அழைக்கின்றனர். இது பத்மாவதி தேவிக்கென அர்ப்பணிக்கப்பட்ட திருக்கோவிலாகும். இதன்பிறகு காக்கத்திய மன்னர் இரண்டாம் பெத்தராஜு சைவ சமயத்தை தழுவியதால், பத்மாட்சி கோவிலாக மாற்றம் பெற்றது. அதுபோல மக்களும், சமண மதத்தின் கடுமையான பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிக்க விரும்பவில்லை. அதனால் மக்களும் சைவ சமயத்தை தழுவினர்.

ஆலய அமைப்பு

ஹனமகொண்டா மலை மீது சுமார் ஆயிரம் அடி உயரத்தில் இக்கோவில் எழிலாக காட்சி தருகிறது. மலை அடிவாரத்தில் அழகிய திருக்குளம் நீர் நிறைந்து காணப்படுகிறது. மலையேற எளிதான படிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இக்கோவிலின் குறிப்பிடத்தக்க அம்சமாக அமைந்துள்ள தூண் கருங்கல்லால் ஆனது. 'அண்ணா கொண்டா தூண்' நாற்கர வடிவில் திகழ்கிறது. நான்கு பக்கத்திலும் சமண சிற்பங்கள் வடிக்கப்பட்டு உள்ளன.

ஆலயக் கருவறை, குகைக்குள் அமைந்துள்ளது. அதே கருவறையில் பெரிய தீர்த்தங்கர பர்சவநாதர் திருவுருவம் உள்ளது. வலது புறம் யட்ச தரனேந்திரனும், வலதுபுறம் பத்மாவதியும் அருள்பாலிக்கின்றனர். பாறையின் புடைப்புச் சிற்பங்களாக இவை அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவற்றின் திருமேனியில் வண்ணங்கள் பூசப்பட்டு உள்ளன. இது தவிர, கருவறைச் சுற்றில் சமண தீர்த்தங்கர் மற்றும் பிற சமண தெய்வங்களுக்கும் சிற்பங்கள் வடிக்கப்பட்டு, அவற்றின் மீதும் வண்ணங்கள் பூசப்பட்டு உள்ளன.

வலம்வரும் குகைப்பகுதியில் சிவலிங்கம் மற்றும் நந்தியின், சிலா வடிவங்கள் காணப்படுகின்றன. மலை அடிவாரத்தில் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் மற்றும் சித்தேஸ்வரர் கோவில்கள் இருக்கின்றன. இவ்வாலய மூலவரான அன்னை பத்மாட்சி காலையில் சிறுமி வடிவத்திலும், மதியம் இளம் பெண்ணாகவும், மாலையில் முதிய பெண் வடிவிலும் காட்சி தருகின்றார்.

ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் கூடும் 'பதுக்கம்மா' விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். அந்த விழாவில் மலையடிவாரத்தில் உள்ள குளத்தில் பெண் பக்தர்கள் ஏராளமான பூக்களைத் தூவி வணங்குவார்கள். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை, தரிசனம் செய்வதற்காக திறந்திருக்கும்.

அமைவிடம்

தெலுங்கானா மாநிலம், வாராங்கல் மாவட்டத் தலைநகரான வாராங்கல் நகரில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹனமகொண்டா பகுதியில் மலைமீது இக்கோவில் அமைந்துள்ளது. ஐதராபாத் நகரில் இருந்து 141 கி.மீ. தொலைவில் உள்ளது.


Read Entire Article