ARTICLE AD BOX
இந்தியாவில் இன்று, மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவாகப் பார்க்கப்படும் ஐபிஎல்லை, உருவாக்கி வளர்த்ததில் லலித் மோடியின் பங்கு முக்கியமானது. 2008இல் அறிமுகமான இந்த தொடர், உலக அளவில் பிரபலம் அடைந்ததற்கும், வருமானத்தை ஈட்டுவதற்கும் லலித் மோடியே காரணம். பின்னர், 1,700 கோடி ரூபாய் அளவிற்கு லலித் மோடி மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு கிரிக்கெட் சம்மேளனத்தில் இருந்து நீக்கப்பட்டார். இவர் மீது குற்றப் பிரிவு போலீசார் வழக்கு தொடர்ந்து கைது செய்ய இருந்த நேரத்தில், அதாவது 2010இல் வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார். இந்த நிலையில், வானுவாட்டு தீவில் தஞ்சமடைந்த லலித் மோடி, அந்நாட்டின் குடியுரிமையையும் பெற்றிருந்தார். அவருடைய பாஸ்போர்ட்டை உடனடியாக ரத்து செய்யுமாறு குடியுரிமை ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜோதம் நபாட் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “லலித் மோடி குடியுரிமைக்காக விண்ணப்பித்திருந்தபோது நடத்தப்பட்ட அனைத்து நிலையான பின்னணிச் சோதனைகள், இன்டர்போல் குற்றப்பின்னணியின் எந்த குற்றவியல் தண்டனையும் பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் லலித் மோடி குறித்து எச்ச்சரிக்கை அறிவிப்பை வெளியிட இந்திய அதிகாரிகள் இன்டர்போலிடம் கோரிக்கை வைத்திருப்பது குறித்த தகவல் எனக்கு கிடைத்தது. அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லாததால் இரண்டு முறையும் இன்டர்போல் தரப்பில் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இத்தகைய எச்சரிக்கையின் காரணமாக அவரின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் பிரிட்டனில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகிய லலித் மோடி, தனது இந்திய கடவுச்சீட்டை ஒப்படைக்க விண்ணப்பித்திருந்தார். இந்த நிலையில், வானுவாட்டு தீவின் கடவுச்சீட்டு ரத்து செய்யப்பட்டுள்ளதால் லலித் மோடி சிக்கலில் மாட்டியுள்ளார். இதையடுத்து, அவரை நாடு கடத்துவதற்கான கோரிக்கையை இந்திய அரசாங்கம் முன்வைக்க வாய்ப்புள்ளது.