ARTICLE AD BOX
மனிதன் எல்லாவற்றிலும் வெற்றி பெறுவதற்கு எதிர்நீச்சல் அவசியமாகிறது. எதிர்நீச்சல் போடுவதற்கும் மன தைரியம், துணிச்சல் வேண்டும். யார் தடுத்தாலும் அதை எல்லாம் ஒரு காதில் வாங்கி மற்றொரு காது வழியாக விட்டு விட்டு நம் எண்ணத்தில் மட்டும் எதிர்நீச்சல் போட்டு ஜெயிக்கும் பண்பை வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்படி இருந்தால்தான் வெற்றி உறுதிபடும்.
தோல்விகள் பல வந்தாலும் துவண்டுவிடாமல் இருப்பதற்கு எதையும் எதிர்த்து போராடும் குணம் மிகவும் அவசியமாகிறது. அப்படி போராடி பெறுவதில்தான் வெற்றியின் மகத்துவமே அடங்கியிருக்கிறது. எத்தனை தோல்விகளை எதிர்கொண்டாலும் "நாம் பெரும் ஒரே ஒரு வெற்றி அந்தத் தோல்விகள் அனைத்தையும் திரையிட்டு மூடிவிடும்" என்பதை உறுதியாக நம்பவேண்டும்.
அந்த நம்பிக்கையில் சஞ்சலம் இன்றி இருந்தால் நாம் போடும் எதிர்நீச்சல் அனைத்தும் வெற்றியாக மாறும். எதிர்நீச்சல் போடுவதற்கு மனிதன் இயற்கையிடமிருந்தே அநேகமாக பாடங்களை கற்றுக்கொள்ள முடியும். எப்படி என்கிறீர்களா?
ஒரு விதையிடமிருந்தே நாம் எதிர்நீச்சல் கற்றுக் கொள்ளலாம். எவ்வளவோ மண்ணைபோட்டு மூடுகிறோம் அந்த விதையில். அது செடியாய் முளைத்து வெளிவரும்போது வியப்போடு பார்க்கிறோமா இல்லையா? அது விதையின் செடி உணர்த்தும் பாடம். நீ என்ன செய்தாலும் என்னால் வெளிவர முடியும் என்று உணர்த்துவதை காணலாம். நீயும் அப்படி வெளியில் வா என்கிறது. அது வளைந்து நெளிந்த கேள்வி குறியோடு.
இன்னும் சிலர் ஆற்றுக்கு குளிக்கச்சென்றால் தலைக்கு சீயக்காய் தேய்ப்பதற்கு கொண்டு செல்லும் வடித்த கஞ்சி பாத்திரத்தை கரையிலே வைத்துக்கொண்டு, அதனால் ஆற்றில் மூழ்கி குளிக்காமல் தண்ணீரை எடுத்து குளித்துவிட்டு வருபவர்களும் உண்டு. ஆற்றில் இறங்கி குளிப்பதற்கு அப்படி ஒரு பயம். அவரை எப்படியும் ஆற்றிற்குள் இழுத்துச்செல்ல முயன்றாலும் வர மறுத்து விடுவார். எதிர்நீச்சலை கற்றுக்கொள்ள மிகவும் சாமர்த்தியமான இடம் என்றால் அது ஆறுதான்.
ஒரு மீனிடமிருந்து அவர்கள் எதிர்நீச்சல் போடுவது எப்படி என்பதை கற்றுக்கொள்ளலாம். நெஞ்சினைப் பிளந்து நீரைக்கிழித்து எதிரே செல்வது மீன்போடும் எதிர்நீச்சல். ஒரு மீனே அப்படி எதிர்நீச்சல் போட்டு அது வாழும் நீரில் இருக்கும் மற்ற ஜீவன்களிடமிருந்து தற்காத்துக் கொள்கிறது என்றால் மனிதனால் போட முடியாதா என்ன? மனிதன் இதனிடம் இருந்தும் பாடம் கற்கலாம் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
சுழன்று அடிக்கும் சூறாவளி, வெள்ளம், மண்அரிப்பு என்று எத்தனையோ இயற்கை பேரிடர்கள் வரும்பொழுது மரத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்படுவது உண்டு. சுழற்றி அடிக்கும் சூறாவளி காற்றில் தென்னை மரம் அடி முதல் நுனி வரை அசைந்தாடுவதை பார்க்கலாம். இப்பொழுதே முறிந்து விழுந்து விடுமோ என்றுகூட எண்ணத் தோன்றும்.
ஆனால் அதையும் கண்டு கதிகலங்கி போகாமல் தன் உயிர் வளர தளராமல் தென்னை போடும் எதிர்நீச்சல் இருக்கிறதே அதை நினைவில் கொள்ளவேண்டும். அதிலும் காய்த்து குலுங்கும் அத்தனை காய்களுடன் காற்றுடன் அதுபோடும் எதிர்நீச்சல் இருக்கிறதே அதுதான் நமக்கு அது நடத்தும் பாடம். மற்ற மரங்களும் எதிர்நீச்சலுக்கு ஒரு எடுத்துக்காட்டு.
எந்த செயலில் வெற்றிபெற தாமதமானாலும் மனம் தளராமல் அனைத்தையும் மன தைரியத்துடன் எதிர்கொண்டு இறுதி வெற்றி நமக்கே என்று மன உறுதியோடு போராடினோம்.
ஆனால் வானம் மட்டுமல்ல வாழ்க்கையும் வசப்படும். வெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர்நீச்சல் என்ற பாடலை நினைவில் கொண்டோமானால் நம்மாலும் எதிலும் வெற்றிபெற முடியும் என்பது உறுதி.
விரிக்காத வரை
சிறகுகள் கூட பாரம்தான் ...!
விரித்து பறக்கத்
தொடங்கினால்
வானம் கூட
தொட்டுவிடும் தூரம்தான்!