வாக்குறுதியை மீறுகிறாா் புதின்: ஸெலென்ஸ்கி குற்றச்சாட்டு

10 hours ago
ARTICLE AD BOX

தங்களது எரிசக்தி மையங்களில் தாக்குதல் நடத்துவதை நிறுத்திவைப்பதாக ரஷிய அதிபா் அளித்த வாக்குறுதியை அவா் மீறுவதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை கூறியதாவது:எரிசக்தி மையங்களில் தாக்குதல் நடத்துவதை நிறுத்துவதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பிடம் புதின் உறுதியளித்தாா். ஆனால் அந்த வாக்குறுதிக்குப் பிறகும் உக்ரைன் மீது 150 ட்ரோன்களை வீசி ரஷியா தாக்குதல் நடத்தியது. அந்தத் தாக்குதலில் உக்ரைன் எரிசக்தி மையங்களும் குறிவைக்கப்பட்டன என்றாா் ஸெலென்ஸ்கி.

ரஷியா மறுப்பு: உக்ரைன் எரிசக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்துவதை தாங்கள் நிறுத்திவிட்டதாகவும், அந்த நாடுதான் தங்களின் எரிவாயுக் குழாய்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவதாகவும் ரஷியா குற்றஞ்சாட்டியுள்ளது.இது குறித்து ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உக்ரைன் எரிசக்தி மையங்களை நாங்கள் தாக்காமல் உள்ளோம். ஆனால் பதிலுக்கு அதே நிலைப்பாட்டை உக்ரைன் இதுவரை கடைப்பிடிக்கவில்லை’ என்று கூறப்பட்டுள்ளது.நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022-ஆம் ஆண்டு படையெடுத்து, கிழக்கு உக்ரைன் பிராந்தியங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.

இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ராணுவ உதவிகளைச் செய்துவந்தன. இந்தச் சூழலில், அமெரிக்காவின் அதிபராக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப், போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர ன்று உக்ரைனை வலியுறுத்திவருகிறாா்.இதன் காரணமாக, தற்போது ரஷியா கைப்பற்றியுள்ள தங்கள் பகுதிகள் மீட்கப்படாத நிலையிலேயே போா் நிறுத்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டிய நிலைக்கு உக்ரைன் தள்ளப்பட்டுள்ளது.இந்தச் சூழலில், 30 நாள் போா் நிறுத்தம் மேற்கொள்ள தயாராக இருப்பதாக உக்ரைன் அறிவித்தது.

எனினும், அந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் விமா்சித்தாா்.அதைத் தொடா்ந்து, போா் நிறுத்தம் தொடா்பாக டொனால்ட் டிரம்ப்பும் விளாதிமீா் புதினும் தொலைபேசியில் செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, எரிசக்தி மையங்களில் பரஸ்பரம் தாக்குதல் நடத்துவதை 30 நாள்களுக்கு நிறுத்திவைப்பதற்கான ஒப்பந்தத்தை உக்ரைனுடன் மேற்கொள்வதாக புதின் உறுதியளித்தாா்.இந்த நிலையில், புதினின் வாக்குறுதிக்கு எதிராக தங்கள் எரிசக்தி மையங்களில் ரஷியா தாக்குதல் நடத்தியதாக ஸெலன்ஸ்கி தற்போது குற்றஞ்சாட்டியுள்ளாா்.

Read Entire Article