ARTICLE AD BOX
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே, குளிர்சாதன வசதியுடன் இயக்கப்படும் மின்சார ரயிலுக்கான உத்தேச அட்டவணை வெளியாகியிருக்கிறது.
பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) தயாரிக்கப்பட்டிருக்கும் குளிர்சாதன வசதியுடைய புறநகர் ரயில், கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்குவது என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்த ரயில் இயக்கப்பட்டால், புறநகர் ரயில் சேவையில், முதல் ஏசி ரயில் என்ற பெருமையைப் பெறும்.
12 பெட்டிகள் கொண்ட இந்த ஏசி ரயில் மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் என்றும், மொத்தமாக ஐந்தாயிரம் பேர் வரை பயணிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் இயக்கப்படுவது தொடர்பாக ரயில்வே போக்குவரத்துப் பிரிவின் சார்பில் ஒரு பரிந்துரை அனுப்பப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த உத்தேச அட்டவணைப்படி,
இந்த ரயில் தாம்பரம் பணிமனையில் இருந்து
அதிகாலை 5.45 மணிக்கு புறப்படும்.
காலை 6.45 மணிக்கு சென்னை கடற்கரை வந்தடையும்.
சென்னை கடற்கரையில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்துக்கு 7.48 மணிக்கும், செங்கல்பட்டுக்கு காலை 8.35 மணிக்கும் வந்தடையும்.
இது மீண்டும் செங்கட்பட்டில் இருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்துக்கு காலை 9.38 மணிக்கும் வந்து, சென்னை கடற்கரைக்கு 10.30 மணிக்கு வந்தடையும்.
சென்னை கடற்கரையில் இருந்து மீண்டும் பிற்பகல் 3.45 மணிக்குப் புறப்பட்டு தாம்பரத்துக்கு மாலை 4.20 மணிக்கும், செங்கல்பட்டுக்கு மாலை 5.25 மணிக்கும் வந்தடையும்.
பிறகு, செங்கல்பட்டிலிருந்து மாலை 5.45 மணிக்குப் புறப்பட்டு தாம்பரத்துக்கு மாலை 6.23 மணிக்கும், சென்னை கடற்கரைக்கு 7.15 மணிக்கு வந்தடையும்.
பிறகு, சென்னை கடற்கரையிலிருந்து இரவு 7.35 மணிக்கு இந்த ரயில் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படவிருக்கிறது. இது தாம்பரத்தை இரவு 8.30 மணிக்கு வந்தடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ரயில், முக்கிய பாதையில் செல்லும்போது மட்டும் கோட்டை, பூங்கா, எழும்பூர், மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, தாம்பரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, சிங்கப்பெருமாள் கோவில், பரனூர் ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும் வகையில் பயணம் திட்டமிடப்படலாம் என்றும், வாரத்தில் ஞாயிறு தவிர ஆறு நாள்கள் மட்டும் இயக்கப்படலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த உத்தேசப் பட்டியல் அப்படியே ஏற்றுக்கொள்ளப்படுமா? அல்லது மாற்றங்கள் செய்யப்படுமா என்பது விரைவில் தெரியவரும்.