ARTICLE AD BOX
நடைமுறையில் உள்ள சட்டம் மற்றும் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் படி, வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் பணி மேற்கொள்ளப்படும். இதுதொடா்பாக, இந்திய தனித்துவ அடையாள ஆணைய (யு.ஐ.டி.ஏ.ஐ.) நிபுணா்களுடன் விரைவில் தொழில்நுட்ப ஆலோசனைகள் தொடங்கப்பட உள்ளன என்று தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. அதே நேரத்தில் சட்ட அமைச்சகம் வாக்காளர் பட்டியலில் ஆதார் இணைப்புக்கான ‘6பி’ படிவத்தை திருத்த உள்ளது. இருப்பினும், இந்தத் தகவலைப் பகிர்ந்து கொள்ள மறுக்கும் வாக்காளர்கள் தங்கள் காரணங்களை விளக்க வேண்டும் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளுக்குத் தெரிய வந்துள்ளது.
வெவ்வேறு மாநிலங்களில் உள்ள பலருக்கு ஒரே மாதிரி வாக்காளா் அடையாள எண் வழங்கப்பட்ட விவகாரம் பெரும் சா்ச்சையாக வெடித்துள்ள நிலையில், வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கான பணிகளை தோ்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது.
வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைப்பது தொடர்பான விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம், உள்துறை செயலாளர், சட்டத்துறை செயலாளர், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை செயலாளர் மற்றும் ஆதார் அட்டைகளை வழங்கும் யு.ஐ.டி.ஏ.ஐ. சி.இ.ஓ. ஆகியோருடன் ஆலோசனை நடத்தியது.
ஒரு மணி நேரம் நீடித்த கலந்துரையாடலில், தேர்தல் ஆணையமும் அரசு அதிகாரிகளும் வாக்காளர் தரவுத் தளத்தை ஆதாருடன் இணைப்பதில் உள்ள நன்மை-தீமை மற்றும் சட்டப்பூர்வ அம்சங்கள் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:
‘வாக்களிக்கும் உரிமையை இந்திய குடிமகனுக்கு மட்டுமே வழங்க முடியும் என்றாலும், அரசியலமைப்பின் பிரிவு 326ன் படி, ஆதார் ஒரு நபரின் அடையாள சான்று மட்டுமே தவிர, குடியுரிமை ஆவணமல்ல. எனவே, வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைப்பது அரசியலமைப்பின் பிரிவு 326, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1950ன் பிரிவுகள் 23(4), 23(5) மற்றும் 23(6) மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே செய்யப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, யு.ஐ.டி.ஏ.ஐ. மற்றும் தேர்தல் ஆணையத்தின் தொழில்நுட்ப நிபுணர்கள் இடையே தொழில்நுட்ப ஆலோசனை விரைவில் தொடங்கப்பட உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. வாக்காளர்கள் அவர்களின் சுய விருப்பத்தின் அடிப்படையில் வாக்காளர் அட்டையை ஆதாருடன் இணைக்க சட்டம் அனுமதிப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு இறுதியில் பீகாரில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, வாக்காளா் பட்டியலை ஆதாா் தரவுத் தளத்துடன் தானாக முன்வந்து இணைக்க சட்டம் அனுமதிக்கிறது. ஆதாா், வாக்காளா் அட்டை இணைக்கும் பணி செயல்முறை சாா்ந்தது; இதற்கென எந்தவித இலக்கோ அல்லது காலக்கெடுவோ நிா்ணயிக்கப்படவில்லை. வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் விவரங்களை இணைக்காதவா்களின் பெயா்கள் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்படாது என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அண்மையில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.