ARTICLE AD BOX

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவை சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. ஏற்கனவே, அதிமுகவில் உள்கட்சி விவகாரம் பேசுபொருளாக உள்ள நிலையில், நேற்று சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்த போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அதிலும் செங்கோட்டையன் பங்கேற்காமல் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து பேசியிருந்தது இன்னும் ஹாட்டாப்பிக்காக மாறியுள்ளது.
சட்டமன்றத்தில், அவர் வழக்கமாக அதிமுக உறுப்பினர்கள் செல்லும் பாதையைத் தவிர்த்து, சபாநாயகர் செல்லும் பாதையைத் தேர்ந்தெடுத்தது சென்று அவரை சந்தித்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அது மட்டுமின்றி, நேற்று சட்டப்பேரவையில அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பேச அனுமதி அளிக்க வேண்டும் என்று அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் கோஷமிட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அமைதியாக அமர்ந்திருந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற அவிநாசி அத்திக்கடவு திட்டம் வெற்றிபெற்றதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டு கூட்டம் நடைபெற்றது.அதில் வைக்கப்பட்டிருந்த பேனர்களில் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா புகைப்படங்கள் இடம்பெறவில்லை என்பதால் செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை. அதில் இருந்து செங்கோட்டையன் செயல்பாடுகள் தனி அணி போலவே இருந்து வருகிறது.
இத்தகைய சூழலில் பேரவை கூடும் முன் சபாநாயகர் அப்பாவுவை தனியாக சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனையில் என்ன நடந்தது என்பது பற்றிய விவரம் வெளியாகவில்லை. இருப்பினும் செங்கோட்டையன் செயல்பாடுகள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி – செங்கோட்டையன் இடையேயான மோதல்போக்கு வலுக்கிறதா? என்கிற கேள்விகளும் அரசியல் வட்டாரத்தில் எழுந்திருக்கிறது.