ARTICLE AD BOX
கன்னியாகுமரி: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 31ம் தேதி கன்னியாகுமரி வர உள்ளதாக தகவல்கள் வௌியாகி உள்ளன. மத்திய தொழிற்பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்.) 56 வது உதய தினத்தையொட்டி குஜராத் மாநிலம் லக்பத் கோட்டை மற்றும் மேற்கு வங்க மாநிலம் பக்காளி கடற்கரையில் இருந்து கடல் வளத்தை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையின் மண்டல பயிற்சி மையத்தில் கடந்த 7ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். ராணிப்பேட்டையில் இருந்தவாறு காணொலி மூலம் இந்த பேரணியை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.
இந்த பேரணியில் 14 பெண் வீரர்கள் உள்பட மொத்தம் 125 வீரர்கள் கடலோர மார்க்கமாக 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சுமார் 6500 கி.மீ. தூரத்தை கடந்து வரும் 31ம்தேதி கன்னியாகுமரியில் தங்களது பேரணியை நிறைவு செய்ய உள்ளனர். இந்த பயணத்தின் போது கடலோர பொதுமக்களிடம் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் ஆயுத கடத்தல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். வருகிற 31ம் தேதி கன்னியாகுமரியில் நடக்கும் நிறைவு விழாவையொட்டி, மத்திய தொழிற்பாதுகாப்பு படை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் கன்னியாகுமரி கடற்கரையில் நடக்க உள்ளன.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மத்திய தொழில் பாதுகாப்பு படையின் தென் மண்டல ஐ.ஜி.சரவணன் நேற்று கன்னியாகுமரி வந்தார். அவர் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரம், அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிகாப்டர் இறங்குதளம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது குறித்து குமரி மாவட்ட அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘அமித்ஷா வருகை தொடர்பாக இன்னும் உறுதியான தகவல் எதுவும் வரவில்லை’ என்றனர்.
The post வரும் 31ம் தேதி அமித்ஷா கன்னியாகுமரி வருகை? பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு appeared first on Dinakaran.