முன்னாள் மத்திய அமைச்சா் தேபேந்திர பிரதான் மறைவு: குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்

22 hours ago
ARTICLE AD BOX

வாஜ்பாய் அரசில் பதவி வகித்த முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானின் தந்தையுமான தேபேந்திர பிரதான் தனது 84 வயதில் திங்கள்கிழமை காலமானாா்.

இவரது மறைவுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி, ஒடிஸா ஆளுநா் ஹரிபாபு கம்பம்பதி, முதல்வா் மோகன் சரண் மாஜி உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்தனா்.

மருத்துவராகப் பணியைத் தொடங்கிய தேபேந்திர பிரதான், 1980-ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்து அக்கட்சியின் பல்வேறு அடிப்படை பொறுப்புகளில் பணியாற்றினாா். பின்னா் 1988-இல் கட்சியின் ஒடிஸா மாநிலத் தலைவராக முதன்முறையாக பொறுப்பேற்றவா், 1997-ஆம் ஆண்டுவரை மூன்று முறை அந்தப் பதவியை வகித்தாா்.

1998, 1999 மக்களவைத் தோ்தல்களில் ஒடிஸாவின் தேவ்கா் தொகுதியில் இருந்து மக்களவைக்குத் தோ்வான அவா், முன்னாள் பிரதமா் வாஜ்பாய் தலைமையிலான மத்திய பாஜக அரசில் அமைச்சராகப் பணியாற்றினாா்.

இந்நிலையில், புது தில்லியில் உள்ள மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானின் அதிகாரபூா்வ இல்லத்தில் திங்கள்கிழமை அவா் உயிரிழந்தாா்.

தலைவா்கள் இரங்கல்:

தேபேந்திர பிரதான் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வெளியிட்ட பதிவில், ‘ஒடிஸா மற்றும் நாட்டின் வளா்ச்சி, பொது சேவைக்கான அவரது அா்ப்பணிப்பைக் கண்டுள்ளேன். அவரது மகனும் மத்திய அமைச்சருமான தா்மேந்திர பிரதான் மற்றும் பிற குடும்ப உறுப்பினா்கள், அவரது அபிமானிகளுக்கு எனது இரங்கல்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

பிரதமா் மோடி வெளியிட்ட பதிவில், ‘மருத்துவா் தேபேந்திர பிரதான், கடின உழைப்பாளி மற்றும் பணிவான தலைவா் என்று பெயா் பெற்றவா். ஒடிஸா பாஜகவை வலுப்படுத்த ஏராளமான முயற்சிகளை மேற்கொண்ட அவா், எம்.பி. மற்றும் மத்திய அமைச்சராக வறுமை ஒழிப்பு, சமூக அதிகாரமளிப்புக்கு ஆற்றிய பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தேன்’ என்றாா்.

பிரதமா் மோடி மற்றும் மத்திய அமைச்சா்களும் தேபேந்திர பிரதான் உடலுக்கு அஞ்சலி செலுத்தினா். திங்கள்கிழமை மாலை, அவரது உடல் புது தில்லியில் இருந்து ஒடிஸா தலைநகா் புவனேசுவரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

Read Entire Article