ARTICLE AD BOX
2025 மகளிர் பிரீமியர் லீக் தொடரில் கோப்பையை வெல்வதற்காக டெல்லி கேபிடல்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் உபி வாரியர்ஸ் 5 அணிகள் மோதின.
இதில் சிறப்பாக செயல்பட்ட டெல்லி கேபிடல்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் மூன்று அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றன.
புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த டெல்லி கேபிடல்ஸ் நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. எலிமினேட்டர் போட்டியில் குஜராத்தை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
இந்நிலையில் டெல்லி மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டியானது நேற்று இரவு 8 மணிக்கு மும்பையில் இருக்கும் பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது.
2வது கோப்பை வென்ற மும்பை இந்தியன்ஸ்..
இறுதிப்போட்டியில் இரண்டாவது கோப்பையை வெல்ல மும்பை இந்தியன்ஸ் அணியும், முதல் கோப்பையை வெல்ல டெல்லி கேபிடல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
பரபரப்பாக தொடங்கிய போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி 20 ஓவரில் 149/7 ரன்கள் குவித்தது. தனியாளாக நிலைத்து நின்று அணிக்காக விளையாடிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் 66 ரன்கள் அடித்து அசத்தினார்.
150 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய டெல்லி கேபிடல்ஸ் அணி மீண்டும் ஒரு இதயம் உடைக்கும் தோல்வியை சந்தித்தது. பந்துவீச்சில் 2 விக்கெட்டுகள் வீழ்த்திய மாரிசேன் கேப், பேட்டிங்கிலும் தனியாளாக போராடி 5 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என விளாசி 26 பந்தில் 40 ரன்கள் அடித்தார். ஆனால் மற்ற வீரர்கள் யாரும் சோபிக்காததால் 8 ரன்கள் வித்தியாசத்தில் கோப்பையை பறிகொடுத்தது டெல்லி கேபிடல்ஸ் அணி.
தன்னால் முடிந்த அனைத்தையும் செய்த மாரிசேன் கேப் தோல்வியின்போது கண்ணீர் விட்டார்.
இரண்டு முறை WPL ஃபைனலுக்கு சென்ற மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி 2 முறையும் கோப்பை வென்று சாதனை படைத்தது.
3 இறுதிப்போட்டியிலும் தோல்வி..
மகளிர் பிரீமியர் லீக் தொடங்கி 3 ஆண்டுகள் நடந்துள்ள நிலையில், 2023 WPL, 2024 WPL மற்றும் 2025 WPL என மூன்று தொடர்களிலும் முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு சென்ற மெக் லானிங் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி, 3 முறையும் இறுதிப்போட்டியில் தோற்று சோக முகத்துடன் திரும்பியது.
2023 மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோற்ற டெல்லி கேபிடல்ஸ், 2024 மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் ஆர்சிபி அணியிடம் தோற்று கோப்பையை பறிகொடுத்தது. மூன்றாவது முறையாக மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 2025 மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் தோற்றுள்ளது டெல்லி கேபிடல்ஸ்.