ARTICLE AD BOX
ஐசிசி 2025 சாம்பியன் டிராபியில் இந்தியா தங்களது முதல் போட்டியில் வங்கதேசத்தை தோற்கடித்தது. பிப்ரவரி 20ஆம் தேதி துபாயில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேசம் 229 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. பின்னர் விளையாடிய இந்தியாவுக்கு அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் சர்மா 41, சுப்மன் கில் 101*, ராகுல் 41* ரன்களை எடுத்து வெற்றி பெற வைத்தார்கள்.
பந்து வீச்சில் ஷமி 5, ராணா 3, அக்சர் படேல் 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்கள். முன்னதாக அந்தப் போட்டியில் 26-3 என ஆரம்பத்திலேயே வங்கதேசம் தடுமாறியது. அப்போது 9வது ஓவரை வீசிய அக்சர் படேல் 2, 3வது பந்துகளில் மறுபுறம் நங்கூரத்தை போட முயற்சித்த தன்சித் ஹசன் 25, ரஹீமை 1 ரன்னில் அவுட்டாக்கி அசத்தினார்.
நழுவிய வரலாறு:
அடுத்ததாக வந்த ஜாகிர் அலி 4வது பந்தில் எட்ஜ் கொடுத்தார். ஆனால் அல்வா போல கைக்கு வந்த அந்த கேட்சை ஸ்லிப் பகுதியில் நின்ற கேப்டன் ரோஹித் சர்மா கோட்டை விட்டார். அதனால் சாம்பியன்ஸ் ட்ராபி வரலாற்றில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய பவுலர் என்ற மாபெரும் சாதனையை படைக்கும் பொன்னான வாய்ப்பை அக்சர் படேல் நழுவ விட்டார்.
ஏனெனில் இதற்கு முன் 1998 முதல் சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் வேறு எந்த இந்திய பவுலரும் ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்ததில்லை. அப்படிப்பட்ட பொன்னான வாய்ப்பு நழுவ விட்ட ரோகித் சர்மா தன் மீதே ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர். அத்துடன் “மன்னித்து விடுங்கள்” என்று அக்சர் படேலிடம் ஸ்லிப் பகுதியில் நின்றவாரே ரோஹித் சைகையில் மன்னிப்பு கேட்டார்.
ரோஹித் மன்னிப்பு:
மறுபுறம் கோல்டன் டக் அவுட்டாவதில் இருந்து தப்பிய ஜாகிர் அலி 68 ரன்கள் அடித்து தௌஹீத்துடன் சேர்ந்து 154 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவுக்கு சவாலை கொடுத்தார். இறுதியில் போட்டி முடிந்த பின்பும் அக்சர் படேலிடம் கேப்டன் ரோஹித் மன்னிப்பு கேட்காத வகையில் பேசினார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
இதையும் படிங்க: ஜஹீர் கான், ஸ்டார்க்கை முந்திய ஷமி.. சச்சினின் 27 வருட சாதனையை தூளாக்கி.. 5 புதிய சாதனை
“அக்சர் படேலை (கேட்ச் விட்டதற்காக) நான் நாளை இரவு உணவுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். எனக்கு நான் நிர்ணயித்துள்ள தரத்திற்கு அந்த கேட்ச்சை பிடித்திருக்க வேண்டும். அது எளிதான கேட்ச். இருப்பினும் இது கிரிக்கெட்டில் நடைபெறக்கூடிய ஒன்றாகும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்தியா தங்களது அடுத்த போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
The post வரலாற்று சாதனையை செய்த அக்சர் படேல்.. கோட்டை விட்டு மன்னிப்பு கேட்ட ரோஹித்.. நடந்தது என்ன? appeared first on Cric Tamil.