அந்த பந்துகளில்தான் நாட்டுக்காக நிறைய ரன்கள் குவித்துள்ளேன் - விராட் கோலி

2 hours ago
ARTICLE AD BOX

துபாய்,

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. கிரிக்கெட் ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி இருந்த இந்த ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் அரையிறுதிக்கும் தகுதி பெற்றது. நடப்பு சாம்பியன் ஆன பாகிஸ்தான் லீக் சுற்றோடு வெளியேறியது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சதம் அடித்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். பாகிஸ்தான் நிர்ணயித்த 242 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு நங்கூரமாக நின்று சதமடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.

கடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் அவுட் சைடு ஆப் ஸ்டம்ப் பந்துகளில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்ததால் கடும் விமர்சனங்களை சந்தித்த அவர், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வலுவான கம்பேக் கொடுத்து தான் யார் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.

இந்நிலையில் அனைவரும் அவுட் அவுட் சைடு ஆப் ஸ்டம்ப் பந்துகளில் தம்முடைய பலவீனத்தை பார்ப்பதாக விராட் கோலி கூறியுள்ளார். ஆனால் அதில் கவர் டிரைவ் அடித்து நாட்டுக்காக ஆயிரக்கணக்கில் ரன்களை குவித்துள்ளதாக தெரிவிக்கும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு:-

"பாகிஸ்தானுக்கு எதிராக ஆசியக் கண்டத்தில் நீங்கள் விளையாடும்போது அந்த சூழல் நன்றாக இருக்கும். ஏனெனில் மைதானத்தில் இரு நாடுகளுக்கும் சமமான ரசிகர்கள் இருப்பார்கள். அந்த சூழ்நிலையில் அசத்தியது அணியாக எங்களுக்கு இது சிறந்த நாள். தனிப்பட்ட முறையில் எனக்கும் இது சிறந்த நாள்.

கடந்த பல வருடங்களாக அது (அவுட் சைடு ஆப் ஸ்டம்ப் பந்துகள்) என்னுடைய பலவீனமாக இருக்கிறது. ஆனால் அதே பந்தில் நான் ஏராளமான ரன்கள் குவித்துள்ளேன். இன்று அதை அடிப்பதற்கு நான் ஆதரவு கொடுத்துக் கொண்டேன். முதல் சில பவுண்டரிகளை எழும்பி வந்த பந்துகளில் கவர் டிரைவ் பயன்படுத்தித்தான் அடித்தேன். அதற்காக கொஞ்சம் ரிஸ்க் எடுத்து விளையாட வேண்டியுள்ளது.

3வது வரிசையில் களமிறங்கி எனது அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்ல வேண்டும் என்பதே நான் செய்ய நினைக்கும் விஷயமாகும். அப்படி செய்யும்போது வெற்றிகரமாக ஆட்டத்தை பினிஷிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தால் அது இன்னும் சிறந்தது. அது போன்ற சூழ்நிலைகளையே நான் விரும்புகிறேன்" என்று கூறினார்.

Read Entire Article