வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை: பவுன் ரூ60 ஆயிரத்தை கடந்தது

3 hours ago
ARTICLE AD BOX


* ஒரே நாளில் பவுனுக்கு ரூ600 உயர்வு
* விழிபிதுங்கும் நடுத்தர, ஏழை குடும்பங்கள்

சென்னை: தங்கம் விலை வரலாறு காணாத அளவில் நேற்று புதிய உச்சத்தை தொட்டது, முதன் முறையாக பவுனுக்கு ரூ.60 ஆயிரத்ைத கடந்தது. 2025ம் ஆண்டு தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தங்கத்தின் விலையை பொறுத்தவரை, திங்கட்கிழமை ஒரு பவுன் தங்கம் ரூ. 120 உயர்ந்து ரூ.59,600-க்கு விற்பனையானது. செவ்வாய்க்கிழமை விலையில் எவ்வித மாற்றமுமின்றி ஒரு கிராம் தங்கம் ரூ.7,450-க்கும், ஒரு பவுன் ரூ.59,600-க்கும் விற்பனையானது. இதனிடையே அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்ற நிலையில், உலகம் முழுவதும் பங்கு வர்த்தகம் மற்றும் தங்கம் விலையில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தன. குறிப்பாக நேற்று வரலாறு காணாத வகையில் தங்கம் உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டது. முதல் முறையாக தங்கம் விலை ஒரு பவுன் ரூ.60 ஆயிரத்தை கடந்து அனைத்து தரப்பு மக்களுக்கு அதிர்ச்சி வைத்தியத்தை கொடுத்தது.

சாதாரண, நடுத்தர மக்களுக்கு இனி தங்கம் விலை எட்டாக்கனியாகவே இருக்கும் என்று தோன்றுகிறது. நேற்று காலை தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,525க்கும், பவுனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு பவுன் ரூ.60,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் தங்கம் ஒரு பவுன் ரூ.59,600-க்கும் விற்பனையான நிலையில் நேற்று ஒரு பவுன் ரூ.60 ஆயிரத்தைக் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இது நகை வாங்குவோர் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆபரண தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தாலும் கூட நேற்று தங்கத்தின் விலையில் ஒரு புதிய மைல்கல் எனலாம். விலை உயர்வுக்குக் காரணம் என்னவென்று பார்த்தால், உள்நாட்டைப் பொருத்த வரை இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 3 நாட்கள் சிறிய ஏற்றம் கண்டுள்ளதும், பண்டிகை காலம், திருமணம் சீசன் ஆகியவற்றால் தேவை அதிகரித்துள்ளதும் காரணங்களாக பார்க்கப்படுகிறது.

சர்வதேச அளவில் பார்க்கும்போது, அண்மையில் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார். எதிர்பார்த்தபடியே அவர் அதிபராகப் பதவியேற்றதும் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதில் ஒன்று தான் இறக்குமதி வரி விதிப்பு. அண்டை நாடுகளுக்கு இறக்குமதி வரியை அதிகரித்ததோடு மட்டுமல்லாது, இந்தியா உள்ளிட்ட ப்ரிக்ஸ் நாடுகளுக்கும் 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என அதிரடி செய்துள்ளார். இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாகக் கருதி அதன் மீதான முதலீட்டை வேகமாக அதிகரித்துள்ளதால் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

The post வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை: பவுன் ரூ60 ஆயிரத்தை கடந்தது appeared first on Dinakaran.

Read Entire Article