ARTICLE AD BOX
சுகாதாரமற்ற உணவுகள் மற்றும் வடிகட்டப்படாத நீரை நாம் உட்கொள்ளும்போது அவற்றிலுள்ள பாக்டீரியா, வைரஸ் மற்றும் பாரசைட்ஸ் போன்ற கிருமிகள் வயிற்றுப் பிடிப்பு, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, வயிறு வீக்கம், குமட்டல் போன்ற நோய்கள் உண்டாவதற்கான வாய்ப்பை உண்டுபண்ணும். வீட்டிலேயே எளிய முறையில், தொற்றுக்களால் உண்டாகும் வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகளை குணமாக்க பல வழிகள் உள்ளன. அவற்றில் ப்ரோபயோட்டிக்ஸ் நிறைந்த தயிர் முதன்மை வகிக்கிறது. தயிருடன் சேர்த்து உண்ணக்கூடிய மற்ற உணவுப் பொருட்கள் என்னென்ன என்பதையும் இப்பதிவில் பார்க்கலாம்.
1. தயிர்:
தயிரில் உள்ள ப்ரோபயோட்டிக்ஸ் நோய்க் கிருமிகளை அழித்து அவை உண்டாக்கிய வயிற்றுக் கோளாறுகள் குணமாக உதவி புரிந்து, வயிறு குடல் இயக்கங்கள் மீண்டும் சிறப்பாகச் செயல் புரியச் செய்யும். தயிருடன் நமது சமையல் அறையிலுள்ள சில மசாலாப் பொருட்களை சேர்த்து உண்ணும்போது வயிற்றுப் பிரச்சினைகள் விரைவில் குணமாகும்.
2. இஞ்சி:
தயிருடன் சிறிது இஞ்சித் துருவலை சேர்த்து உட்கொண்டால் திடீரென ஏற்படும் வயிற்று வலி குணமாகும். இஞ்சியின் ஆன்டி இன்ஃபிளமேட்டரி மற்றும் ஆன்டி மைக்ரோபியல் குணங்கள் குமட்டலை குணமாக்கவும், உணவுப் பாதையில் உள்ள வீக்கங்களைக் குறைக்கவும் வயிற்றுப் பிடிப்பு மற்றும் வீக்கம் தோன்றுவதற்கான அறிகுறிகளைக் களையவும் உதவும். தயிருடன் சேர்ந்து செரிமானம் சிறப்பாக நடைபெறவும் இஞ்சி உதவி புரியும்.
3. சீரகம்:
இஞ்சி போலவே சீரகமும் சீரான செரிமானத்திற்கு சிறந்த முறையில் உதவி புரியும். சீரகத்தின் ஆன்டி மைக்ரோபியல் குணமானது தீங்கிழைக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடி ஜெயிக்கும் வல்லமை கொண்டது. தயிருடன் சிறிது சீரகத்தை நசுக்கி சேர்த்து உண்பது நல்ல பலன் தரும்.
4. மஞ்சள்:
செரிமான இயக்கத்தை சிறப்பாக்கி வயிற்று வலியைக் குறைக்க உதவும் மற்றொரு மசாலாப் பொருள் மஞ்சள். இதிலுள்ள குர்குமின் என்ற செயல் திறன் மிக்க கூட்டுப்பொருளே இதற்கு உதவுகிறது. குர்குமின் இயற்கையிலேயே ஆன்டி செப்டிக் மற்றும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணம் கொண்டது.
5. புதினா:
புதினாவின் குளிர்விக்கச் செய்யும் குணமானது அஜீரணம், குமட்டல் மற்றும் வீக்கம் போன்ற கோளாறுகளை குணமாக்க உதவி புரியும். ஜீரணப் பாதையில் உள்ள தீங்கு செய்யக்கூடிய நுண்ணுயிரிகளை அழிக்க புதினாவில் உள்ள ஆன்டி பாக்டீரியல் குணங்கள் உதவும். தயிருடன் சில புதினா இலைகளை நசுக்கிப் போட்டு, சிறிது உப்பு மற்றும் லெமன் ஜூஸ் சேர்த்து அருந்த, குளிர்ச்சியான இந்த பானம் வயிற்றுக் கோளாறுகளை விரைவில் நீங்கச் செய்யும்.
6. வெந்தயம்:
வெந்தயத்தில் உள்ள ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணங்களுக்காக, இது பாரம்பரியமாக பல வகை மருந்துகளின் தயாரிப்பில் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. வெந்தயத்தை இரவில் நீரில் ஊற வைத்து, காலையில் அரைத்துப் பேஸ்ட் ஆக்கி தயிருடன் கலந்து உட்கொள்ளலாம். அது வயிற்றின் ஆசிடிட்டியை குறைக்கும். அஜீரணம் மற்றும் வயிற்றுப் போக்கைக் குணப்படுத்தும். தொற்று நோய்க் கிருமிகளையும் அழிக்கும்.
7. பூண்டு:
இயற்கையாகவே பூண்டில் ஆன்டி பாக்டீரியல், ஆன்டி பயோடிக் மற்றும் ஆன்டி ஃபங்கல் குணங்கள் நிறைந்துள்ளன. தயிரில் உப்பு சேர்த்து, பூண்டுப் பற்கள் மற்றும் சிறிது சீரகத்தை நசுக்கிப் போட்டால் ஓர் ஆரோக்கியம் நிறைந்த பானம் கிடைக்கும். இதை தினசரி அருந்தினால் வயிற்றின் நன்மை தரும் பாக்டீரியாக்கள் செழித்து வளரும். கேடு விளைவிக்கும் கிருமிகள் அழியும். இரைப்பை குடல் ஆரோக்கியம் மேம்படும்.
8. மாதுளை முத்துக்கள்:
ஃபிரஷ் மாதுளை முத்துக்களை அரைத்து அதனுடன் தயிர் மற்றும் சிறிது தேன் சேர்த்து குடிப்பது வயிற்றின் நன்மை தரும் பாக்டீரியாக்கள் செழித்து வளரவும், கேடு விளைவிக்கும் கிருமிகள் அழியவும், குடல் ஆரோக்கியம் மேம்படவும் உதவும்.