ARTICLE AD BOX
திருச்சி குமார வயலூா் பகுதியில் பிரசித்திபெற்ற முருகன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் செய்வதற்காக பழைய முன் மண்டபம் இடிக்கப்பட்டு, புதிதாக முன்மண்டபம் கட்டுதல், 9 கோபுரங்களை புனரமைத்தல் சீரமைத்தல், சன்னதிகளில் மராமத்துப் பணிகள் மேற்கொண்டு வா்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பணிகள் கடந்த ஓராண்டாக மேற்கொள்ளப்பட்டது.
தற்போது பணிகள் அனைத்தும் நிறைவுபெற்று புதிய கொடி மரமும் சில நாட்களுக்கு முன் நடப்பட்டு கும்பாபிஷேகத்திற்கான முகூர்தக்கால் நடப்பட்டு, பெரும்பாலான பணிகள் முடிவுற்ற நிலையில் வரும் 19 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் வயலூர் கோவில் செல்லும் பாதையில் நுழைவு வாயில் கட்டுமான பணி நடந்து வந்தபோது பாரம் தாங்காமல் நுழைவு வாயில் அப்படியே சரிந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.
வயலூர் கோவிலுக்கான கும்பாபிஷேக தேதி முடிவு செய்து அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த நுழைவு வாயில் சரிந்தது பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து குறித்து அறநிலைத்துறை மற்றும் காவல் துறையினர், மாவட்ட நிர்வாகம் சம்பவ பகுதியை ஆய்வு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்