ARTICLE AD BOX
மும்பை: வயது காரணமாக மறதியால் அவதிப்படுவதாக அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார். இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் அமிதாப் பச்சன். அவருக்கு 82 வயதாகிறது. வயது மூப்பு குறித்து அவர் கூறுகையில், ‘வயதாக ஆக, மறதியும் சோர்வும் என்னை ஆட்கொள்கிறது. படப்பிடிப்பு தளத்தில் எனக்கான வசனங்களை சொல்ல மறந்துவிடுகிறேன். இதனால் பல டேக்குகள் எடுக்க வேண்டிய நிலை வருகிறது.
இதற்கெல்லாம் மறதி முக்கிய காரணமாகிவிடுகிறது. அதனாலேயே படங்களில் நடிப்பதையும் பிற வேலைகளையும் குறைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனாலும் வாழ்க்கை ஓடும் வரை நானும் ஓடிக்கொண்டே இருப்பேன். அதிலிருந்து நின்றுவிட மாட்டேன். படப்பிடிப்பு முடிந்து இரவு வீட்டுக்கு போனதும், இயக்குனருக்கு போன் செய்து இன்று படப்பிடிப்பு தளத்தில் என்னால் நடந்த தவறுகளுக்காக மன்னிப்பு கேட்கிறேன்.
முடிக்க வேண்டிய நூற்றுக்கணக்கான பணிகளை பற்றி யோசிக்கும்போது ஒரு வித பயம் வந்துவிடுகிறது. இன்று செய்த தவறு, நாளை தொடரக்கூடாது என்பதில் தீர்மானமாக இருந்தாலும் தவறுகள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. அது கவலை தரும் விஷயம்தான்’ என அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.