கூரன் விமர்சனம்…

2 hours ago
ARTICLE AD BOX

ஓய்வுபெற்ற நீதிபதி ஓய்.ஜி.மகேந்திரன் தீர்ப்பு சொன்ன வழக்குகளில், ஜான்சி என்ற நாய் நீதி கேட்டு கோர்ட்டுக்கு சென்றது முக்கியமானது ஆகும். கொடைக்கானலில் தனது குட்டியுடன் சாலையில் வாக்கிங் சென்ற ஜான்சி, ஒரு குடிகார கும்பல் தனது குட்டி மீது காரை ஏற்றிக் கொன்றதைப் பார்த்து தவிக்கிறது. உடனே நீதி கேட்டு காவல் நிலையம் செல்கிறது. அங்கு அது விரட்டப்படுகிறது. பிறகு வழக்கறிஞர் எஸ்.ஏ.சந்திரசேகரன் வீட்டுக்குச் செல்கிறது. வாயில்லா ஜீவன் என்றாலும், அது தன் நிலையை அவர் உணரும்படி செய்கிறது.

பல வருடங்களாக நீதிமன்றமே செல்லாத எஸ்.ஏ.சந்திரசேகரன், நாயின் கண்ணீருக்கு நியாயம் கிடைக்க வாதாடுகிறார். அதன்படி நீதி கிடைத்ததா என்பது மீதி கதை. நாயின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு மனிதன் போராடும் காட்சிகள் யதார்த்தமாக இருக்கின்றன. ஜான்சி என்ற நாய்க்கு ஒரு பிளாஷ்பேக். அது பைரவா என்ற பெயரில், காவல்துறையில் துப்பு துலக்க உதவியது. அதன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட நிலையில், சரவண சுப்பையா உதவியுடன் அது தப்பிக்கிறது.

காட்சிகளுக்கு ஏற்ப நாய் சிறப்பாக நடித்துள்ளது. சட்ட நுணுக்கங்களை கையில் எடுத்துக்கொண்டு எஸ்.ஏ.சந்திரசேகரன் புத்திசாலித்தனமாக வாதாடுகிறார். நாய் மீது காரை ஏற்றிக்கொன்ற ரஞ்சித் ராஜாவின் தந்தையாக கவிதா பாரதி, அவருக்காக வாதாடும் வழக்கறிஞர் பாலாஜி சக்திவேல், கோர்ட்டில் திடீர் திருப்பத்துக்கு உதவும் ஜார்ஜ் மரியான், நாய் குரைப்பதை மொழிபெயர்க்கும் சத்யன், எஸ்.ஏ.சந்திரசேகரன் உதவியாளர் இந்திரஜா ரோபோ சங்கர் இயல்பாக நடித்துள்ளனர்.

கொடைக்கானலின் குளுமையை ஒளிப்பதிவாளர் மார்ட்டின் தன்ராஜ் நேர்த்தியாகப் பதிவு செய்துள்ளார். சித்தார்த் விபின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கவனத்தை ஈர்க்கின்றன. எஸ்.ஏ.சந்திரசேகரன் திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். நிதின் வேமுபதி இயக்கியுள்ளார். மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கும் இவ்வுலகில் வாழ உரிமை உண்டு என்று சொல்லியிருக்கின்றனர். இன்னும் அழுத்தமாக வலியுறுத்தி இருக்கலாம்.

Read Entire Article