ARTICLE AD BOX
கொலாஜன் என்பது மனித உடலின் பல பாகங்களுக்குத் தேவையான கட்டமைப்பை அளிக்கும் முக்கிய புரதமாகும்.
அன்றாட உடல் செயல்பாட்டுக்கு உதவும் அதி முக்கியமான அமினோ அமிலங்கள் அடங்கிய கொலாஜன் உடலின் புரதத்தில் சுமார் 30% ஆகும். சருமம் மற்றும் குருத்தெலும்பு போன்ற இணைப்புத் திசுக்களின் முதன்மைக் கட்டமைப்பு கூறு கொலாஜன் ஆகும்.
கொலாஜன் நமது சரும செல்கள் உறுதியாகவும், நெகிழ்ச்சியுடனும், மீளுருவாக்கத்துடனும் இருக்க உதவுகிறது. மேலும் சருமத்தின் நெகிழ்வுத்தன்மைக்கு இன்றியமையாததாக உள்ளது
முடி, சருமம், நகங்கள், எலும்புகள், தசைநார்கள், தசைநாண்கள், குருத்தெலும்பு, இரத்த நாளங்கள் மற்றும் குடல்கள் உள்ளிட்ட பல உடல் பாகங்களில் பல்வேறு வகையான கொலாஜன்கள் உள்ளன. அவற்றில் முக்கியமான 3 இங்கு:
பெரும்பாலானவை எலும்புகள் மற்றும் தசைநாண்களில் காணப்படும் வகை 1 கொலாஜன் ஆகும்.
குருத்தெலும்புகளில் காணப்படும் வகை 2 கொலாஜன் (மூக்கு, காதுகள் மற்றும் மூட்டுகளில் வளைக்கக்கூடிய பொருள்)
சருமம், இரத்த நாளங்களின் உட்புறம் மற்றும் குடல்களில் காணப்படும் வகை 3 கொலாஜன் ஆகிறது.
கொலாஜன் உற்பத்தி சீராக இருப்பது உடல் ஆரோக்கியத்தில் அவசியம். ஆனால் சில காரணங்களால் கொலாஜன் உற்பத்தி குறையும் வாய்ப்புகள் அதிகம். இதை எப்படி தெரிந்து கொள்வது?
கொலாஜன் குறைவாக உற்பத்தி ஆகிறது என்பதற்கான சில அறிகுறிகளாக மூட்டு வலி, சரும சுருக்கங்கள், கோடுகள், குழிவான கண்கள், தசை வலி, காயம் மெதுவாக குணமடைதல் மற்றும் வறண்ட சருமம் ஆகியவை சொல்லப்படுகிறது.
மேலும் வகை 1 கொலாஜனில் உள்ள பிரச்சனையால் ஆஸ்டியோஜெனிசிஸ் இம்பெர்ஃபெக்டா (உடையக்கூடிய எலும்பு நோய்) ஏற்படுகிறது.
சிலருக்கு மிகவும் லேசான அறிகுறிகளும், மற்றவர்களுக்கு மிதமான அல்லது அதிக கடுமையான அறிகுறிகளும் இருக்கும். இதே போல் மற்ற வகை கொலாஜன் குறையும்போது ஏற்படும் பாதிப்புகளும் மாறுபடும்.
கொலாஜன் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் இந்த பாதிப்புகளை ஈடுசெய்து நலம் பெறலாம். நாம் உண்ணும் சில உணவுகள் கொலாஜனை நேரடியாக வழங்கினாலும், வேறு சில குறிப்பிட்ட உணவுகள் அதிக கொலாஜனை உற்பத்தி செய்து நமது உடலின் திறனை மேம்படுத்துகிறது.
கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும் சில உணவுகளாக முட்டை வெள்ளைக்கரு, கொட்டைகள் & விதைகள், காளான்கள், மீன்/கடல் உணவு மற்றும் பச்சை இலை காய்கறிகளுடன் வைட்டமின் சி, லைகோபீன், புரோலின் போன்ற சத்துக்கள் நிறைந்த பழங்களும் பெர்ரி, தக்காளி, ஆரஞ்சு, பொமலோ போன்றவைகளும் சப்ளிமெண்ட் உணவுகளும் பரிந்துரைக்கப்படுகின்றன.