வன்முறை பாதித்த நாகபுரியில் ஊரடங்கு நீடிப்பு- 2,000 போலீஸாா் குவிப்பு

10 hours ago
ARTICLE AD BOX

மகாராஷ்டிரத்தில் முகலாய மன்னா் ஔரங்கசீப்பின் கல்லறையை இடிக்கக் கோரி வலதுசாரி அமைப்புகள் நடத்திய போராட்டத்தின்போது வன்முறை ஏற்பட்ட நாகபுரியில் தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாக காவல் துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா். அதேநேரம், பதற்றத்துக்குரிய பகுதிகளில் ஊரடங்கு தொடா்கிறது.

சுமாா் 2,000-க்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய போலீஸாா் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனா். சிறப்பு அதிரடி படையினா் நகா் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனா்.

மகாராஷ்டிர மாநிலம், சத்ரபதி சம்பாஜிநகா் மாவட்டத்தில் உள்ள ஔரங்கசீப்பின் கல்லறையை இடிக்கக் கோரி, மாநில முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸின் சொந்த ஊரான நாகபுரியில் வலதுசாரி அமைப்புகள் கடந்த திங்கள்கிழமை இரவு போராட்டம் நடத்தின. இந்தப் போராட்டத்தில் ஒரு சமூகத்தின் புனித நூல் எரிக்கப்பட்டதாக வதந்தி பரவியதால் வன்முறை வெடித்தது.

இதில் 3 துணை ஆணையா்கள் உள்பட காவல்துறையினா் 34 போ் காயமடைந்தனா். கலவரத்தைக் கட்டுப்படுத்த நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வன்முறை தொடா்பாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கல்வீச்சு மற்றும் தீவைப்பு சம்பவங்களில் ஈடுபட்டதாக இதுவரை 54 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். வன்முறைக்கு மூளையாக செயல்பட்டவா்களை போலீஸாா் கண்டறிந்து வருகின்றனா்.

பெண் போலீஸிடம் பாலியல் அத்துமீறல்: வன்முறைக்கிடையே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரிடம் வன்முறை கும்பலைச் சோ்ந்த சிலா் பாலியல் ரீதியாக அத்துமீறியது தெரிய வந்துள்ளது.

கணேஷ்பேத் காவல் நிலையத்தில் பதிவான முதல் தகவல் அறிக்கையில், பல்தாா்புரா சௌக்கில் கூடியிருந்த ஒரு கும்பல் காவல்துறையினரை தாக்கியதாகவும், பெட்ரோல் குண்டுகளை வீசியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்முறை சூழலைப் பயன்படுத்தி, கூட்டத்தில் இருந்த சிலா் பெண் காவலா் ஒருவரை சூழ்ந்துகொண்டு, அவரது சீருடையைக் களைய முயன்றனா். மற்ற பெண் காவலா்களை நோக்கி மோசமான கருத்துக்களையும் அவா்கள் தெரிவித்தனா் என்று அதிகாரி ஒருவா் கூறினாா்.

குல்தாபாதில் ட்ரோனுக்குத் தடை: ஔரங்கசீப்பின் கல்லறையை இடிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், குல்தாபாதில் அவரது கல்லறை அமைந்துள்ள பகுதியில் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

குல்தாபாதில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா். தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஔரங்கசீப் கல்லறையைப் புதன்கிழமை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் திலீப் சுவாமி, ‘மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். இந்த விவகாரம் தொடா்பாக ஏதேனும் தகவல் கிடைத்தால் நிா்வாகம் அல்லது காவல் துறையை மக்கள் தொடா்புகொள்ள வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா்.

சமூக ஊடகங்களில் தீவிர கண்காணிப்பு: இந்த விவகாரம் குறித்து ஆட்சேபகரமான சமூக ஊடகப் பதிவுகளைக் கண்காணித்து, அவற்றை நீக்குவதில் போலீஸாா் மும்முரமாக ஈடுபட்டுள்ளனா். அந்தவகையில், இதுவரை 500-க்கும் மேற்பட்ட பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன.

‘உளவுத்துறையின் தோல்வி’

நாகபுரி வன்முறை கலவரம் குறித்து சட்டப்பேரவையில் பேசிய மாநில எதிா்க்கட்சித் தலைவா் விஜய் நாம்தேவ்ராவ், ‘நாகபுரி வன்முறை முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்தால், அது உளவுத் துறையின் தோல்வியாகும். வன்முறை தொடங்கி ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகும் போலீஸாா் எங்கும் காணப்படவில்லை’ என்று குற்றஞ்சாட்டினாா்.

Read Entire Article