ARTICLE AD BOX
பிரபல பாலிவுட் நடிகையான ப்ரீத்தி ஜிந்தா, ஐபிஎல் கிரிக்கெட் அணிகளில் ஒன்றான பஞ்சாப் கிங்ஸ் அணியின் இணை உரிமையாளராகவும் உள்ளார். இந்த நிலையில், சமூக வலைதள கணக்கை பாஜவுக்கு வாடகைக்கு விட்டு ரூ.18 கோடி வங்கிக்கடன் தள்ளுபடி பெற்றுள்ளதாக அவதூறு கூறிய கேரள காங்கிரஸ் கட்சிக்கு ப்ரீத்தி ஜிந்தா கண்டனம் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் செயல்படும் நியூ இண்டியா கோ ஆபரேட்டிவ் வங்கியில், நடிகை ப்ரீத்தி ஜிந்தாவுக்கு கணக்கு இருந்தது. அந்த வங்கி மூலம் 10 ஆண்டுக்கு முன்னதாக அவர் 18 கோடி ரூபாய் கடன் பெற்றார். பின்னர், எவ்வித பாக்கியும் இல்லாமல் அந்த கடனை அவர் திருப்பிச் செலுத்தி இருக்கிறார். இந்நிலையில், சமீபத்தில் அந்த வங்கி திவால் நிலைக்கு சென்றுவிட்டது. தற்போது ரிசர்வ் வங்கியின் நேரடி கண்காணிப்பில் வங்கி நிர்வாகம் இயங்கி வருகிறது. இந்த நிலையில், சமூக வலைதள கணக்கை பாஜவுக்கு வாடகைக்கு விட்டு ரூ.18 கோடி வங்கிக்கடன் தள்ளுபடி பெற்றுள்ளதாக கேரள மாநில காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது.
இதுகுறித்து ப்ரீத்தி ஜிந்தா தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், “நான் மட்டுமே எனது சமூக வலைதள பக்கத்தை கையாண்டு வருகிறேன். இதுபோன்ற போலிச் செய்திகளை பரப்புவது (காங்கிரஸ்) வெட்கக்கேடானது. யாரும் எனது கடனை தள்ளுபடி செய்யவில்லை. எனது பெயரை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதாக கூறியிருப்பது அதிர்ச்சியை தருகிறது. 10 ஆண்டுக்கு முன் நான் வாங்கிய கடனை முற்றிலும் திருப்பிச் செலுத்திவிட்டேன். எனது இந்தப் பதிவு அனைத்துக் குற்றச்சாட்டுகள், அவதூறுகளுக்கு விளக்கமளிப்பதாக அமையும் என்று நம்புகிறேன” எனப் பதிவிட்டுள்ளார். காங்கிரஸின் இந்தப் பதிவுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.