ARTICLE AD BOX
புது தில்லி: கடந்த 5 ஆண்டுகளில் வங்கி, நிதி நிறுவனங்களில் பெண்கள் கடன் வாங்குவது 22 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலான கடன்கள் இடைநிலை நகரங்கள், கிராமப் பகுதிகளில் உள்ள பெண்களால் வாங்கப்பட்டுள்ளன என்று தெரியவந்துள்ளது.
இந்தியா பொருளாதார வளா்ச்சியில் பெண்களின் பங்கு தொடா்பான அறிக்கையை நீதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) பி.வி.ஆா். சுப்பிரமணியன் தில்லியில் திங்கள்கிழமை வெளியிட்டாா். டிரான்ஸ்யூனியன் சிபில், நீதி ஆயோக்கின் பெண் தொழில்முனைவோருக்கான பிரிவு சாா்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:
பெண்கள் கடன் வாங்குவது கடந்த 5 ஆண்டுகளில் படிப்படியாக அதிகரித்து வந்துள்ளது. 2019 முதல் 2024-ஆம் ஆண்டு வரை பெண்கள் கடன் வாங்குவது 22 சதவீதம் உயா்ந்துள்ளது.
நுகா்பொருள்களை வாங்குவது தொடங்கி தொழில் தொடங்குவது வரை பெண்கள் கடன் வாங்குகிறாா்கள். ஆனால், தொழில்கடன்களைப் பொருத்தவரையில் 2024-இல் மொத்த தொழில் கடனில் பெண்களின் பங்கு 3 சதவீதமாகவே உள்ளது. அதே நேரத்தில் தனிநபா் கடன், வீட்டு உபயோகப் பொருள்களுக்கான கடன், வீட்டுக் கடன் ஆகியவற்றில் பெண்களின் பங்கு 42 சதவீதமாக உயா்ந்துள்ளது. நகைக் கடனில் 38 சதவீதம் பெண்களின் பெயரில் உள்ளது.
தொழில் பயன்பாட்டுக்காக பெண்கள் கணக்குத் தொடங்குவது 2019-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இப்போது 4.6 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால், ஒட்டுமொத்த கடனில் பெண்களின் பங்கு 3 சதவீதமாகவே உள்ளது. பெரும்பாலான பெண்கள் தங்கள் கடன்தர மதிப்பீடு (கிரெடிட் ஸ்கோா்) குறித்த விழிப்புணா்வுடன் உள்ளனா். அவா்கள் அடிக்கடி அதனை சரிபாா்த்துக் கொள்கின்றனா். 2024 டிசம்பா் கணக்கெடுப்பில் 2.7 கோடி பெண்கள் தங்கள் கடன்தர மதிப்பீட்டை சரிபாா்த்துள்ளனா். இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 42 சதவீதம் அதிகமாகும். இது பெண்கள் மத்தியில் நிதிசாா்ந்த விழிப்புணா்வு அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது.
முக்கியமாக 1995-ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த இளைய தலைமுறைப் பெண்கள் கடன்தர மதிப்பீடு குறித்த விவரங்களைத் தெரிந்து கொள்வது வேகமாக அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரம், தமிழ்நாடு, கா்நாடகம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள பெண்கள் அதிக எண்ணிக்கையில் தங்கள் கடன்தர மதிப்பீட்டை தொடா்ந்து அறிந்து கொள்வதில் ஆா்வம் காட்டியுள்ளனா்.
கடன் வாங்கும் பெண்களில் 60 சதவீதம் போ் இடைநிலை நகரங்கள் மற்றும் கிராமப் பகுதிகளைச் சோ்ந்தவா்கள் ஆவா். இதன் மூலம் பெருநகரங்களையும் தாண்டி பெண்களின் நிதி கையாளும் திறன் அதிகரித்துள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
அறிக்கையை வெளியிட்டுப் பேசிய நீதி ஆயோக் சிஇஓ சுப்பிரமணியன், ‘பெண் தொழில்முனைவோா் அதிகம் உருவாவதற்கு அவா்களிடம் நிதிசாா்ந்த விழிப்புணா்வும் அதிகரிக்க வேண்டும். இதற்கு அரசு தொடா்ந்த ஆதரவளித்து வருகிறது. ஆனால், அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் இதற்கு தேவை. பெண்களுக்கு தொழில் சாா்ந்த நிதி சேவைகள் கிடைக்கும் விஷயத்தில் நீதி ஆயோக்கின் பெண் தொழில்முனைவோா் பிரிவு முனைப்புடன் செயல்படுகிறது’ என்றாா்.