ARTICLE AD BOX
தாயாய்.. மனைவியாய்.. மகளாய்..! மகளிர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது? வரலாறு என்ன தெரியுமா?
சென்னை: ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்களின் முக்கியத்துவத்தை போற்றவும், அவர்களின் பிரதிநித்துவத்தை அனைவருக்கும் உணர்த்தும் விதமாகவே மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. மகளிர் தினம் மார்ச் 8 ஆம் தேதி கொண்டாடப்படுவது ஏன்? எந்த ஆண்டில் இருந்து தொடங்குகிறது என்ற வரலாற்றை இங்கே பார்க்கலாம்.
தாயாக, மனைவியாக, மகளாக என ஒரு சமூகத்தில் நீக்கமற நிறைந்திருப்பது பெண்கள்தான். ஒரு நாடு முன்னேற வேண்டும் என்றாலும் சரி.. ஒரு குடும்பத்தில் தலைமுறையே உயர வேண்டும் என்றாலும் பெண்களின் கல்வி அவசியமானது என்று மூத்தோர்கள் சொல்லி வைத்து இருக்கிறார்கள். ஆண்களுக்கு எந்த வகையிலும் பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என்றாலும் கூட இன்னும் கூட பெண்களுக்கான பாகுபாடு நீடிக்கத்தான் செய்கிறது.

மார்ச் 8 ஆம் தேதி கொண்டாடப்படுவது ஏன்?
சமூகத்தில் ஆண்களை விட பெண்களை மட்டம் தட்டி பார்க்கும் மனநிலை இன்னும் முழுமையாக மறையாத நிலையே இன்றைய நவீன உலகத்திலும் நீடிக்கிறது. பெண்களின் முக்கியத்துவத்தை போற்றவும் அவர்களின் பிரதிநித்துவத்தை அனைவருக்கும் உணர்த்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. மகளிர் தினம் மார்ச் 8 ஆம் தேதி கொண்டாடப்படுவது ஏன்? எந்த ஆண்டில் இருந்து தொடங்குகிறது என்ற வரலாற்றை இங்கே பார்க்கலாம்.
1975 ஆம் ஆண்டு, முதல் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதாக ஐக்கிய நாடுகள் அவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனாலும் இதற்கான விதையானது 1850 களிலேயே ஆரம்பித்தது. பெண்களுக்கு ஊதியத்தில் பாகுபாடு காட்டப்பட்டதற்கு எதிராக கொதித்தெழுந்த பெண்கள் 1910 ஆம் ஆண்டு டென்மார்க் கோபன்ஹேகனில் உரிமை மாநாடை நடத்தினர். இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.
ரஷ்யாவில் பெண் தொழிலாளர்கள் மிகப்பெரும் புரட்சி
மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் மிக முக்கியமானவர் ஜெர்மனியைச் சேர்ந்த கிளாரா ஜெட்கின். பெண்களின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த கிளாரா.. ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு குறிப்பிட்ட நாளை பெண்கள் தினமாக கடைபிடிக்க வேண்டும் என நினைத்தார். இதற்கான முயற்சிகளிலும் அவர் ஈடுபட்டாலும், பொதுவான ஒரு நாளை கொண்டாடும் கனவு நிறைவேறவில்லை. ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு நாளில் கொண்டாடிக்கொண்டு இருந்தன.
இந்த சமயத்தில் 1917 ஆம் ஆண்டு ரஷ்யாவில் பெண் தொழிலாளர்கள் மிகப்பெரும் புரட்சியை முன்னெடுத்தார்கள். இதனால் அந்த நாட்டின் ஆட்சியே கவிழ்ந்தது. 1920ல் சோவியத் ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ் நகரில் பெண்கள் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் தொடங்கிய நாள் ரஷ்யாவின் ஜூலியன் காலண்டர் படி பிப்ரவரி 23 ஞாயிற்றுக்கிழமையாகும். ஆனாலும் கிரிகோரியனின் காலண்டர் படி மார்ச் 8 ஆம் தேதியாக இருந்தது. இந்த நாளே தற்போது மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.