ARTICLE AD BOX
ஒருவருக்கு ஒருவர் சம்பந்தம் இல்லாத 4 பேர், அதிக வருமானம் இல்லாத வேலைகளை செய்து பிழைப்பு நடத்துகின்றனர். அப்போது ரோட்டில் இருந்த 2,000 ரூபாய் நோட்டை மணிகண்டன், கருணாகரன், ரமேஷ் திலக், ஸ்ரீநாத் கண்டெடுக்கின்றனர். அதை பங்கு போடுவதில் குழப்பம் ஏற்படுவதால், அருகிலுள்ள மது பாருக்கு சென்று குடிக்கின்றனர். அந்த பாரை ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் நடத்துகிறார். இந்நிலையில், 2,000 ரூபாய் கள்ளநோட்டு என்று தெரிந்து பிரச்னை ஏற்படுகிறது பிறகு நடப்பது மீதி கதை. சவுரிமுடி வியாபாரம் செய்யும் மணிகண்டன், கிளி ஜோதிடர் கருணாகரன், பேய் விரட்டும் நாத், மிமிக்ரி கலைஞர் ரமேஷ் திலக் ஆகிய நால்வரும் ரசிகர்களை சிரிக்க வைக்கின்றனர். யோகி பாபு வழக்கமான பன்ச் டயலாக் பேசி காமெடி செய்கிறார்.
விடிவி கணேஷ், ரவிமரியா, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சாம்ஸ், மைம் கோபி, ஜான் விஜய், சரவண சுப்பையா, மாரிமுத்து, மதுசூதன ராவ் ஆகியோர் தங்கள் அனுபவ நடிப்பை வழங்கியுள்ளனர். கதைக்கேற்ப இயல்பாக ஒளிப்பதிவு செய்துள்ள மாசாணி, இசை அமைத்துள்ள பிஜோர்ன் சுராவ், எடிட்டர் எஸ்.இளையராஜா மற்றும் கதை, திரைக்கதை, வசனம் எழுதிய எஸ்.ஏ.பத்மநாபன் ஆகியோரின் பணி கவனத்தை ஈர்க்கிறது. கிரைம் திரில்லரை காமெடியுடன் சொல்லியிருக்கும் ஸ்ரீநாத், நட்சத்திர பட்டாளத்தை இயக்கி சிரிக்க வைத்துள்ளார். வசனங்களை குறைத்து, காட்சிகளை இன்னும் அழுத்தமாக படமாக்கி இருக்கலாம்.