ARTICLE AD BOX
கடந்த நாற்பதாண்டுகளுக்கு மேலாக மலையாள சினிமாவில் முடிசூடா ஹீரோவாக வலம் வருபவர் மோகன் லால். தனது அழகான குழி விழும் கன்னங்களுக்காகவும், மாறுபட்ட நடிப்பிற்காகவும் 'லாலேட்டன்' என செல்லமாக அழைக்கப்படுகிறார். மோகன் லால் தமிழில் சில படங்கள் நடித்திருந்தாலும், மம்முட்டியை போல் பெரிய அளவில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற வில்லை. மம்முட்டியை போல தமிழில் நல்ல கதாபாத்திரங்கள் அமையாததும், மோகன் லால் திரையில் பேசும் தமிழில் மலையாள சாயல் இருப்பதும் மோகன்லாலை தமிழ் ரசிகர்களிடமிருந்து சற்று தள்ளி வைத்துள்ளது.
இருப்பினும் கடந்த 2014 ல் மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ் உட்பட அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் வரவேற்பை பெற்றது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெளியான 'லூசிபர்' திரைப்படம் மோகன்லாலுக்கு புதிய அடையாளத்தை பெற்றுதந்தது. அரசியல் திரில்லர் படமான லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம் மோகன்லால் நடிப்பில் 'எம்புரான்' என்ற பெயரில் வரும் மார்ச் 27 அன்று திரைக்கு வரவுள்ளது.
லூசிபர் படத்தை இயக்கிய ப்ரித்திவிராஜ் எம்புரான் படத்தை இயக்குகிறார். குரேஷி ஆபிரகாம், ஸ்டீபன் நெடும்பள்ளி என்ற இரண்டு கேரக்டர்களில் நடிக்கிறார் மோகன் லால். 'Game of Throne' படத்தில் நடித்த ஜெரோம் பப்ளின் என்ற ஆங்கில நடிகர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். லூசிபர் படத்தில் முக்கிய கதா பாத்திரத்தில் நடித்த டெவினோ தாமஸ் எம்புரானிலும் இருக்கிறார். 2020 முதல் தற்போது 2025 வரை டெவினோ பல வெற்றி படங்களை தந்து கொண்டிருக்கிறார். இருப்பினும் இந்த வெற்றிகளை மனதில் வைத்து கொள்ளாமல் மோகன் லாலுக்காக இரண்டாவது ஹீரோவாக நடிக்கிறார்.
மூத்த தலைமுறை நடிகர் மோகன் லால், இளைய தலைமுறை நடிகர்கள் பிரித்திவிராஜ், டெவினோ தாமஸ் என மூன்று ஹீரோக்களும் ஒரே படத்தில் இணைந்து பணியாற்றி உள்ளார்கள். இது போன்று ஈகோ இல்லாமல் ஹீரோக்கள் இணைந்து பணியாற்றுவதும் மலையாள சினிமா அடுத்த கட்டத்திற்கு நகர முக்கிய காரணமாக இருக்கிறது. நம் தமிழ் சினிமா ஹீரோக்களை போல 'திரையில்' தனியாவர்த்தனம் 'செய்வோம் என அங்கு அடம் பிடிப்பதில்லை. (இளம் தலைமுறை கலைஞர்கள் இணைந்து உருவாக்கி கேரளாவில் வெற்றி நடை போடும்' ரேகா சித்திரம்' படத்தில் கூட மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இன்று தென்னிந்திய சினிமாவின் முக்கிய ஐகானாக திகழும் மோகன் லால் தனது மானசீக குருவாக சொல்வது நம் நடிகர் திலகம் சிவாஜியை தான். சிவாஜி அவர்களுடன் கடந்த 1997 ஆம் ஆண்டு 'யாத்ரமொழி' என்ற மலையாள படத்தில் இணைந்து நடித்தார். இப்படத்தில் சிவாஜியின் பல நடிப்பு பரிணாமங்களை வியந்து பார்த்ததாக சொல்கிறார் மோகன் லால். "என் மலையாளி கர்வத்தை அழித்தவர் சிவாஜி" என்று ஒரு பத்திரிக்கையில் குறிப்பிட்டு இருந்தார். சிவாஜி அவர்கள் இறந்த பிறகு நடந்த ஒரு நினைவேந்தல் நிகழ்வுக்கு வந்து பேசிய மோகன் லால் "இந்த உலகின் எட்டாவது அதிசியம் சிவாஜி" என்று குறிப்பிட்டார். நமது நடிகர் திலகம் அவர்கள் பல நடிகர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது போல் மோகன்லாலுக்கும் இருக்கிறார். லாலேட்டன் நடிப்பில் சில நாட்களில் வெளியாக உள்ள எம்புரான் வெற்றி பெற தமிழ் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துவோம்.