ARTICLE AD BOX
வாழை மரத்தின் அனைத்து பாகங்களுமே மருத்துவ குணம் உடையது. அந்த வகையில், இந்த வாழைப்பூவில் பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், காப்பர், மெக்னீசியம், இரும்பு போன்ற சத்துகள் உள்ளன. தொற்று நோய் முதல் புற்றுநோய் வரை மொத்த ஆபத்துகளையும் நம்மிடம் நெருங்க விடாமல் செய்கிறது.
பெண்களுக்கு இந்த பூக்களை, வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். காரணம், ஹீமோகுளோபின் பிரச்சனையை இந்த வாழைப்பூக்கள் சரிசெய்வதுடன், ரத்த விருத்தியையும் அதிகரிக்க செய்கிறது. சிவப்பு ரத்த அணுக்களை பெருக்கெடுக்க செய்யும். மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு மற்றம் வயிற்றுவலியால் அவதிப்படும் பெண்கள், இந்த பூவை வேக வைத்து சாப்பிட்டால் குணமாகலாம்.
இந்த வாழைப்பூவை தயிருடன் சேர்த்து சாப்பிடும்போது, உடலில் புரொஜெஸ்டிரான் ஹார்மோனை அதிகரிக்க செய்து, மாதவிடாய் ரத்தப்போக்கினை குறைக்கிறதாம். இதனால் வெள்ளைப்படுதல் பிரச்சனையும் தீரும். இப்படி ஏராளமான மருத்துவப் பயன்களை உள்ளடக்கிய வாழைப்பூ-வில் எப்படி ரோட்டுக்கடை ஸ்டைலில் வடை தயார் செய்யலாம் என்று இங்குப் பார்க்கலாம்.
ரோட்டுக்கடை ஸ்டைல் வாழைப்பூ வடை - தேவையான பொருட்கள்
கடலை பருப்பு - 2 டம்ளர்
வாழைப்பூ - 1 1/2 கப்
பச்சை மிளகாய் - 2
கருவேப்பிலை - ஒரு கொத்து
சோம்பு - 1/2 ஸ்பூன்
பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
வர மிளகாய் - 2
வெங்காயம் - 1
கொத்தமல்லி தழை - தேவையான அளவு
நீங்கள் செய்ய வேண்டியவை
முதலில் 2 டம்ப்ளர் கடலை பருப்பு எடுத்து அதனை தண்ணீரில் நன்கு கழுவிக் கொள்ளவும். பிறகு, அதில் 1 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து ஒன்று முதல் ரெண்டு மணி நேரத்திற்கு அப்படியே ஊற வைக்கவும். இவை நன்றாக ஊறி வந்தவுடன், தண்ணீரை வடிகட்டி விட்டு சிறிதளவு கடலை பருப்பை தனியாக எடுத்து வைக்கவும்.
இப்போது, ஒரு மிக்சி எடுத்து அதில் கடலை பருப்பு, வாழைப்பூ, பச்சை மிளகாய், கருவேப்பிலை, சோம்பு, பொட்டுக்கடலை, வர மிளகாய் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து அரைக்கவும். சிறிய மிக்சியாக இருந்தால், இவற்றை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்தது அரைக்கவும்.
இதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இவற்றை அப்படியே உருண்டை பிடித்து, கையில் வைத்து வடைக்கு தட்டுவது போல் தட்டி மிதமான சூட்டில் இருக்கும் எண்ணெயில் போட்டு எடுக்கவும். இப்போது, சூடான சுவையான வாழைப்பூ வடை ரெடி.