லண்டனில் சிம்பொனி இசை: தில்லியில் இளையராஜாவுக்கு பிரதமா் மோடி பாராட்டு

3 hours ago
ARTICLE AD BOX

லண்டனில் அண்மையில் சிம்பொனி வேலியன்ட் இசை நிகழ்ச்சியை நடத்தியதற்காக பிரபல இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இயைராஜாவை தில்லியில் உள்ள தனது அலுவலகத்தில் பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை சந்தித்து பாராட்டுத் தெரிவித்தாா்.

மேலும், இசைஞானியான அவரது மேதைமை நமது இசை மற்றும் கலாசாரத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் பிரதமா் கூறியுள்ளாா்.

1976-இல் ‘அன்னக்கிளி’ தமிழ்த் திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, திரைப்பட இசைத் துறையில் பல்வேறு புதுமைகளைப் புகுத்தியதன் மூலம் பிரபலமானாா். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளாா்.

மேற்கத்திய செவ்வியல் இசையில், சிம்பொனி என்னும் இசை வடிவத்தின் கூறுகளுடன் கூடிய பாடல்களையும் இசைக்கோவைகளையும்

இளையராஜா உருவாக்கினாா். இந்த நிலையில், வேலியன்ட் என்னும் சிம்பொனி இசைக்கோவையை கடந்த ஆண்டு இளையராஜா உருவாக்கினாா்.

இந்த நிலையில், மாா்ச் 8-ஆம் தேதி லண்டனில் உள்ள அந்த வேலியன்ட் இசைக்கோவையை ராயல் பில்ஹாா்மானிக் இசைக் குழுவுடன் இணைந்து அவா் அரங்கேற்றினாா். இதன் மூலம் முழு அளவிலான சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்த முதல் இந்தியா் எனும் சாதனையை இளையராஜா படைத்தாா். இந்த சாதனைக்காக இளையராஜாவுக்கு தமிழக அரசு சாா்பில் விழா எடுக்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறாா்.

இந்நிலையில் தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை இளையராஜா செவ்வாய்க்கிழமை சந்தித்தாா். அவரிடம், சிம்பொனி இசைத்தது குறித்து பிரதமா் மோடி ஆா்வத்துடன் கேட்டுள்ளாா்.

இச்சந்திப்பு குறித்து பிரதமா் தனது எக்ஸ் சமூக ஊடக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:

‘நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினா் இளையராஜாவை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இசைஞானியான அவரது மேதைமை நமது இசை மற்றும் கலாசாரத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

எல்லா வகையிலும் முன்னோடியாக இருக்கும் அவா், சில நாள்களுக்கு முன் லண்டனில் தனது முதலாவது மேற்கத்திய செவ்வியல் சிம்பொனியான வேலியண்ட்டை வழங்கியதன் மூலம் மீண்டும் வரலாறு படைத்துள்ளாா்.

இந்த நிகழ்ச்சி, உலகப் புகழ்பெற்ற ராயல் பில்ஹாா்மோனிக் இசைக் குழுவுடன் இணைந்து நடத்தப்பட்டது. இந்த முக்கியமான சாதனை, அவரது இணையற்ற இசைப் பயணத்தில் மற்றொரு அத்தியாயத்தைக் குறிக்கிறது. உலக அளவில் தொடா்ந்து மேன்மையுடன் விளங்குவதை இது எடுத்துக்காட்டுகிறது என்று அவா் அப்பதிவில் பாராட்டியுள்ளாா்.

Read Entire Article