ARTICLE AD BOX
A.R.Rahman: சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானார் ஜேம்ஸ் வசந்தன். இவர், திரைப்படம், மத ஈடுபாடு தாண்டி தமிழ் மீது மிகவும் பற்று கொண்டவர். அதன் காரணமாக, நம் அரிய பொக்கிஷமான பழந்தமிழ் இலக்கியங்களை இசைவடிவில் யாரும் கேட்டு மகிழும்படி ஜனரஞ்சகமாக வழங்குகிற இசைக்குழு' ஒன்றை தொடங்கியுள்ளார்.
ஏ.ஆர். ரஹ்மானுடன் சந்திப்பு
இந்தக் குழுவிற்கு தமிழ் ஓசை என பெயர் வைத்துள்ளார். அத்துடன் சுமார் 60 பேர் கொண்ட இந்த இசைக்குழு மூலம் தமிழ்நாடு, இந்தியா மட்டுமின்றி பல நாடுகளிலும் இசைக் கச்சேரிகளை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், ஜேம்ஸ் வசந்தன் தனது இசைக் குழுவினருடன் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானை சந்தித்து உள்ளார். இதுகுறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவரது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஒப்பற்ற தமிழன்
அந்தப் பதிவில், "எங்கள் 'தமிழ் ஓசை' இசைக்குழுவை தன் புதிய ஒலிப்பதிவுக் கூடத்துக்கு வரவழைத்து எங்களைப் பாடவைத்து ஒன்றரை மணி நேரம் அமர்ந்து எல்லாப் பாடல்களையும் கேட்டு மகிழ்ந்து பாராட்டினார் ரஹ்மான்.
கடுமையான அலுவல்களுக்கிடையில் தமிழுக்கும், கலைக்கும், பிறரை ஊக்குவிக்கவும் தன் நேரத்தை செலவழிக்கிற இவருடைய இந்த தன்னலமற்ற எண்ணந்தான் இவரை உலக மேடையில் அமரவைத்திருக்கிறது.
தமிழினம் இவரை உயர்த்தியது. அந்த இனத்திற்கு கைம்மாறு செய்கிற ஓர் ஒப்பற்ற தமிழன்!" என இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானை பாராட்டி உள்ளார்.
ஏ.ஆர். ரஹ்மான் உடல்நிலை
முன்னதாக, கடந்த 16 ஆம் தேதி இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஏ.ஆர். ரஹ்மான் தொடர் பயணம் செய்ததால் களைப்பாக உள்ளதாக தெரிவித்தார். அத்துடன் அவருக்கு மருத்துவமனையில் சாதாரண பரிசோதனைகள் தான் எடுக்கப்பட்டது. அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு தான் ஏற்பட்டுள்ளது. ரஹ்மானின் உடல்நிலையில் பயப்படும் படி எதுவும் இல்லை. அவர் உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவமனை நிர்வாகமும் குடும்பத்தினரும் விளக்கம் அளித்தனர்.
மகிழ்ச்சியில் ரசிகர்கள்
இந்த செய்திகளுக்கு பின், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் தமிழ் ஓசை குழுவினரை சந்தித்து அவர்களிந் அனைத்து பாடல்களையும் கேட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த தகவல்களால், ஏ.ஆர். ரஹ்மான் மீண்டும் பணிக்கு திரும்பியதை நினைத்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
