ARTICLE AD BOX
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயிலும், மற்ற அணிகள் பங்கேற்கும் போட்டிகள் பாகிஸ்தானின் கராச்சி, ராவல்பிண்டி, லாகூர் ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது நியூசிலாந்து. இந்த நிலையில் தொடரின் 2-வது லீக்கில் இந்தியா அணியும், வங்காளதேசத்தை (ஏ பிரிவு) எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளுக்கு இடையேயான போட்டி துபாயில் இன்று (வியாழக்கிழமை) இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது.
அண்மையில், இங்கிலாந்துக்கு எதிரான தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய உற்சாகத்துடன் களம் காணும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி போட்டியை வெற்றியோடு தொடங்கும் முனைப்புடன் தீவிரமாக தயாராகி வருகிறது.
ரோகித் சர்மா கடந்த சில போட்டிகளில் ஒற்றை இலங்க எண்ணை மட்டுமே எடுத்து பல்வேறு விமர்சனங்களை சந்தித்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் (ஒரு போட்டியில்) இரண்டை சதம் அடித்து விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் மறுபடியும் சொதப்புவரா இல்லை ரன்களை குவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
விராட் கோலி இன்னும் 37 ரன் எடுத்தால் ஒரு நாள் போட்டியில் 14 ஆயிரம் ரன் மைல்கல்லை எட்டும் 3-வது வீரர் என்ற பெருமையை பெறுவார் என்பதால் இந்த இலக்கை அடைய கோலி இந்த போட்டியில் உத்வேகத்துடன் விளையாடுவார் என்றே ரசிகர்கள் ஆவலுடம் எதிர்பார்க்கிறார்கள்.
சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் ஒரு அணி மொத்தமே 3 லீக்கில் தான் விளையாட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஒன்றில் தோற்றாலும் அரைஇறுதி கனவு களைந்து விடும் என்பதால் இந்திய வீரர்கள் மிகுந்த கவனத்துடன் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கள் அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் தனிநபராக ஆட்டத்தில் வெற்றியை தேடித்தரக்கூடிய வகையில் அதிக திறமையோடு இருப்பதாகவும், இந்தியாவை கண்டிப்பாக தோற்கடிப்போம் என்று வங்காளதேச கேப்டன் ஷன்டோ நம்பிக்கையோடு கூறியுள்ளார்.
வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்ற முனைப்பில் இந்தியாவும், இந்தியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து முனைப்பில் வங்காளதேச அணியும் போட்டி போடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் சுவாரஸ்யத்திற்க்கு பஞ்சம் இருக்காது.
சாம்பியன்ஸ் கோப்பையில் இந்திய அணிக்கு இது முதல் போட்டி என்பதால் இந்தியா இந்த ஆட்டத்தில் வங்காளதேச அணியை வீழ்த்தி வெற்றியை பதிவு செய்யும் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் இந்த போட்டியை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த இரு அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தை ஸ்போர்ட்ஸ்18 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.