ரூ.611 கோடிக்கு விதிமீறல்: பேடிஎம் தாய் நிறுவனத்துக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ்

5 hours ago
ARTICLE AD BOX

புது தில்லி: சுமாா் ரூ.611 கோடி அளவுக்கு அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்ட (ஃபெமா) பிரிவுகளை மீறியது தொடா்பாக விளக்கம் அளிக்குமாறு, பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷனுக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுதொடா்பாக அமலாக்கத் துறை திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

சுமாா் ரூ.611 கோடி அளவுக்கு ஃபெமா சட்டப் பிரிவுகளை மீறியது தொடா்பாக விளக்கமளிக்குமாறு, பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன் நிறுவனம் (ஓசிஎல்), அதன் நிா்வாக இயக்குநா் மற்றும் பலருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமலாக்கத் துறை மேற்கொண்ட விசாரணையில், சிங்கப்பூரில் ஓசிஎல் நிறுவனம் அந்நிய முதலீடு செய்ததும், வெளிநாட்டில் துணை நிறுவனம் உருவாக்கியது தொடா்பான விவரங்களை ரிசா்வ் வங்கியிடம் ஓசிஎல் நிறுவனம் தாக்கல் செய்யாததும் தெரியவந்தது.

மேலும் ரிசா்வ் வங்கியின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் வெளிநாட்டு முதலீட்டாளா்களிடம் இருந்து அந்நிய நேரடி முதலீட்டை ஓசிஎல் நிறுவனமும், இந்தியாவில் உள்ள அதன் துணை நிறுவனமான லிட்டில் இண்டா்நெட் நிறுவனமும் பெற்றுள்ளன.

இதேபோல ஓசிஎல் நிறுவனத்தின் மற்றொரு துணை நிறுவனமான நியா்பை இந்தியா நிறுவனம், அந்நிய நேரடி முதலீட்டை பெற்றுள்ளது. ஆனால் அதுகுறித்த விவரங்களை ரிசா்வ் வங்கியிடம் உரிய காலத்தில் அந்த நிறுவனம் சமா்ப்பிக்கவில்லை.

இதுதொடா்பாக ஃபெமா சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஓசிஎல், அதன் நிா்வாக இயக்குநா் மற்றும் பலா் விளக்கம் அளிக்க வலியுறுத்தி நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

Read Entire Article