ARTICLE AD BOX
ரூ.4.3 கோடி-ஐ இழந்த பெண்.. உண்மை காதலுக்காக ஏங்கி டேட்டிங் ஆப்-ஐ நம்பி ஏமாந்த அதிர்ச்சி சம்பவம்!
இந்த காலத்தில் ஒருவர் காதலில் விழுவதற்கு கல்லூரியோ, வேலை செய்யும் அலுவலகமோ, பஸ் ஸ்டாண்டோ, கோயிலோ, குளமோ தேவையே இல்லை என்ற நிலை வந்துவிட்டது. மொபைலில் கிடைக்கும் சில நம்பகத்தன்மையான டேட்டிங் செயலிகளை வைத்திருந்தாலோ போதுமானது என்றாகிவிட்டது. இந்தியாவின் மெட்ரோ நகரங்களில் மட்டுமில்லை இரண்டாம் அடுக்கு, மூன்றாம் அடுக்கு நகரங்களில் கூட இதுதான் நிலைமை. உலகெங்கும் டேட்டிங் செயலி மூலம் காதலன்/காதலியை தேடும் கலாச்சாரம் அதிகரித்துவிட்டது என்றே கூற வேண்டும்.ஆனால், இதுபோன்ற டேட்டிங் முறையை பயன்படுத்தும் சிலர், மிகப்பெரிய மோசடிகளில் சிக்கிக்கொள்கின்றனர்.
அந்தவகையில், தற்போது, மேற்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த விவாகரத்து பெண் ஒருவர், "Plenty of Fish" என்ற டேட்டிங் செயலி மூலம் கோடிகளை இழந்துள்ளார். 57 வயதான அன்னெட் ஃபோர்டு என்ற பெண், கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். கருத்துவேறுபாடு காரணமாக 33 வருட திருமண வாழ்க்கையில் இருந்து கணவர் பிரிந்து சென்றார்.

இதையடுத்து, உண்மையான காதலுக்காக ஏங்கிய அன்னெட் ஃபோர்டுக்கு, "Plenty of Fish" என்ற செயலி மூலம் வில்லியம் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் வில்லியம் உடனான நட்பு, அப்பெண்ணுக்கு நல்ல நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, ஒரு கட்டத்தில் தனக்கு பணத்தேவை அதிகமாக இருக்கிறது என்று பல்வேறு பொய்களை கூறி பெண்ணின் நம்பிக்கையை மேலும் பலப்படுத்தியுள்ளார். இதனை பயன்படுத்திக்கொண்டு வில்லியம், ஒருநாள் கோலாலம்பூரில் தனது பணப்பை, ஏடிஎம் கார்டு உள்ளிட்டவைகள் மொத்தமாக திருடப்பட்டுவிட்டதாக பொய்யாக தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் தேவை என்று கூறியுள்ளார்.
இது பொய் என்று அறியாமல், அந்த பெண்ணும் பணத்தை கொடுத்து உதவியுள்ளார். இதேபோல், தொடர்ந்து தனக்கு உடல்நிலை சரியில்லை, மருத்துவமனையில் இருக்கிறேன், பில் கட்ட பணம் வேண்டும் உள்ளிட்ட அடுக்கடுக்கான பொய்களை கூறிவந்துள்ளார். இப்படியாக, அந்த பெண் ரூ.1.6 கோடியை செலவழித்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்படுகிறோமா என்று சந்தேகம் ஏற்படவே, அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதையடுத்து, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அன்னெட் ஃபோர்டு, நெல்சன் என்ற மற்றொரு நபருடன் ஃபேஸ்புக் பழகி வந்துள்ளார். அடையாளம் தெரியாத நபர், தான் ஆம்ஸ்டர்டாமைச் சேர்ந்தவர் என்றும், federal bureau of investigation-னில் தனது நண்பர் ஒருவர் இருப்பதாகவும் அன்னெட் கொடுத்த வழக்கை விசாரிக்க $2500 அவர் கேட்பதாகவும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தான் ஏமாற்றப்பட்டதால், சுதாரித்த கொண்ட அன்னெட், பணத்தை தர மறுத்துள்ளார்.
இருப்பினும், பணத்தை டெப்பாட்சிட் செய்யவும் பிட்காயின் ஏடிஎம்-ஐ பயன்படுத்தும்படியும் நெல்சன் வற்புறுத்தியுள்ளார். ஒருகட்டத்தில் இதற்கு அன்னெட்டும் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் அவருக்கு தெரியாமலேயே பிட்காயின் மூலம் அக்கவுண்ட்டில் இருந்து ரூ.1.5 கோடி பணம் காணாமல் போனது. இதுகுறித்து அன்னெட் கூறுகையில், இப்போது எல்லாமே இழந்துவிட்டேன். எனவே, இதுபோன்ற மோசடிகளில் யாரும் சிக்கிக்கொள்ளாதீர்கள் என்று வேதனையுடன் தெரிவித்தார்.