ARTICLE AD BOX
ஆண்டுக்கு ரூ.10 கோடி வருமானம் ஈட்டும் நபர் எந்த நாட்டில் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்?
உலகில் ஒவ்வொரு நாடும் குறிப்பிட்ட விதிமுறைகளை பின்பற்றி தனி நபர்களுக்கு வருமான வரியை விதிக்கின்றன. இந்தியாவை பொருத்தவரை அதிகபட்சமாக 30 சதவீதத்துக்கு மேல் வரை வருமானவரி விதிக்கப்படுகிறது.இப்படி அதிகபட்ச வரி அடுக்கில் வருபவர்களுக்கு சில கூடுதல் வரிகளும் விதிக்கப்படுகின்றன.
பொதுவாக உயர் சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்கள் பலரும் இந்தியாவில் தான் அதிகமாக வருமான வரி பிடித்தம் செய்யப்படுகிறது என தொடர்ந்து கூறி வருகின்றனர். இதன் காரணமாக பலரும் இந்தியாவை விட்டு வேறு நாடுகளுக்கு செல்வதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் செபியில் பதிவு செய்யப்பட்ட நிதி திட்டமிடல் நிபுணரான ஏ.கே. மந்தன் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஆண்டுக்கு 10 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் நபர் எந்தெந்த நாடுகளில் எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என்பதை ஒரு பதிவாக வெளியிட்டு இருக்கிறார் .

இதன்படி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியாவில் இருப்பவர்கள் 10 கோடி ரூபாயை வருமானமாக ஈட்டினால் அங்கே எந்த வரியும் கிடையாது. எனவே 10 கோடி ரூபாயும் அவர்களின் கைகளுக்கு கிடைத்து விடும். உலகிலேயே அதிகபட்சமாக பின்லாந்து நாட்டில்தான் வரி விதிக்கப்படுகிறது . பின்லாந்தில் அவர் 10 கோடி ரூபாய் வருமானம் ஈட்டக்கூடிய நபரின் கைகளுக்கு வரி பிடித்தம் போக 4.31 கோடி ரூபாய் தான் கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளார். பின்லாந்தில் 56.9% வரை வரி பிடிக்கப்படுகிறது.
இதுவே அமெரிக்காவில் பார்க்கும் போது 37 சதவீதம் வரி பிடிக்கப்பட்டு 6.3 கோடி ரூபாய் கையில் கிடைக்கும். இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கக்கூடிய சீனாவில் 45 சதவீதம் வரி பிடிக்கப்பட்டு 5.5 கோடி ரூபாய் தான் கையில் கிடைக்கும். இந்த பட்டியலில் மற்றொரு ஆசிய நாடான ஜப்பானை பொறுத்தவரை அதிகபட்ச வரி விதிக்கப்படுகிறது. ஜப்பானில் ஆண்டுக்கு 10 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் நபர் 55.97% வரியை செலுத்தி விட்டு 4.4 கோடி தான் கையில் பெற முடியும்.
ஜெர்மனியிலும் 45 சதவீதம் வரி பிடிக்கப்பட்டு 5.5 கோடி ரூபாய் தான் கையில் கிடைக்கும். இந்தியாவில் 42.74 சதவீத வரி பிடித்தம் செய்யப்பட்டு 5.7 கோடி ரூபாய் தான் கையில் கிடைக்கும். உலகிலேயே அதிகபட்சமாக பிரான்ஸ், ஸ்வீடன், பெல்ஜியம், ஆஸ்திரியா, இஸ்ரேல் ,டென்மார்க் ,அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக வரி பிடித்தம் செய்யப்படுகிறது.
மலேசியாவில் 10 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் ஒரு நபர் 30 சதவீதம் வரி செலுத்தி விட்டு 7 கோடி ரூபாயை பெற முடியுமாம். சிங்கப்பூரில் இது 22 சதவீதமாக இருக்கிறது அங்கே 7.8 கோடி ரூபாய் கைகளில் கிடைக்கும் என அவர் தன்னுடைய பதிவில் தெரிவித்துள்ளார்.
Story written by: Devika