ARTICLE AD BOX
ராணுவ முகாமில் இறங்கிய தீவிரவாதிகள்.. 9 பேர் பலி, பலர் படுகாயம்.. பாகிஸ்தானில் பயங்கரம்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா என்ற பகுதியில் உள்ள அந்நாட்டு ராணுவ முகாமில் திடீரென பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 9 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்களைக் கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் திணறுகிறார்கள். இதனால் அங்கு சமீப காலமாகவே தீவிரவாத தாக்குதல்கள் தொடர்கதையாக இருக்கிறது.

இதற்கிடையே பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா என்ற பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். கைபர் பக்துன்க்வாவில் பாகிஸ்தானின் ராணுவத் தளம் ஒன்று உள்ள நிலையில், அங்கு தான் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
தீவிரவாத தாக்குதல்
முதலில் ராணுவ வளாகத்தின் சுற்றுச் சுவர் அருகே வந்த இரு பயங்கரவாதிகள், உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்துள்ளனர். இதனால் சுற்றுச்சுவர் இடிந்த நிலையில், மற்ற தீவிரவாதிகள் ராணுவ முகாமில் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த பயங்கரவாத தாக்குதலில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.. மேலும் 35 பேர் காயமடைந்தனர். பலரும் உயிருக்கு ஆபத்தான சூழலில் சிகிச்சை பெறும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ரமலான் மாதம் என்பதால் பாகிஸ்தானில் பலரும் நோன்பு கடைப்பிடிக்கிறார்கள். நோன்பு முடிந்து இப்தார் விருந்து முடிந்த சற்று நேரத்தில் பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். தெஹ்ரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான் என்ற அமைப்புடன் சமீபத்தில் கைகோர்த்த ஜெய்ஷ் உல் ஃபர்சான் என்ற பயங்கரவாத அமைப்பு இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
ஷாக் வீடியோ
இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. ராணுவ முகாமை சுற்றிலும் வானத்தில் அடர்த்தியான புகை எழுவது தெளிவாகத் தெரிகிறது. மேலும், பின்னணியில் துப்பாக்கிச் சூடு நடக்கும் சத்தமும் தெளிவாகக் கேட்கிறது.
முதலில் ஒரே நேரத்தில் இருவர் கார்களில் வந்து தாக்குதல் நடத்தி சுவரை உடைத்துள்ளனர். பிறகு ஐந்து முதல் ஆறு பயங்கரவாதிகள் உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தியதாகத் தெரிகிறது.
தொடரும் தீவிரவாத தாக்குதல்கள்
கடந்த பிப்ரவரி 28ம் தேதி இதே மாகாணத்தில் உள்ள ஒரு மசூதியில் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் தாலிபான் ஆதரவு மதகுரு ஹமீதுல் ஹக்கானி உள்ளிட்ட ஐந்து பேர் கொல்லப்பட்டனர். மேலும் 20 பேர் காயமடைந்தனர். இந்தச் சூழலில் வெறும் சில நாட்களில் அங்கு மீண்டும் ஒரு தாக்குதல் நடந்துள்ளது.