ரயில்வே பணிக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கு- அமலாக்கத் துறை அலுவலகத்தில் லாலு ஆஜா்

5 hours ago
ARTICLE AD BOX

ரயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாகப் பெற்ற வழக்கு தொடா்பான விசாரணைக்காக ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் லாலு பிரசாத் (76) அமலாக்கத் துறை அதிகாரிகள் முன்பு விசாரணைக்காக புதன்கிழமை ஆஜரானாா்.

பிகாா் மாநிலம் பாட்னாவின் பேங்க் சாலையில் அமைந்துள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு விசாரணைக்காக லாலு வந்தபோது, ஏராளமான கட்சித் தொண்டா்கள், அமலாக்கத்துறை அலுவலகத்துக்குச் செல்லும் சாலையில் கூடி நின்று ஆதரவு கோஷங்களை எழுப்பினா்.

முன்னதாக, இந்த வழக்கில் பிகாா் முன்னாள் முதல்வரும் லாலுவின் மனைவியுமான ராப்ரி தேவி, அவரின் மகனும் பிகாா் எம்எல்ஏ-வுமான தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோா் அமலாக்கத் துறை அதிகாரிகள் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு ஆஜராகினா்.

இந்த வழக்கு தொடா்பாக லாலு பிரசாத், ராப்ரி தேவி மற்றும் இவா்களின் இளைய மகனும் பிகாா் பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் ஏற்கெனவே விசாரணை நடத்தியுள்ளனா். தற்போது மீண்டும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்த விசாரணை குறித்து தேஜஸ்வி யாதவ் கூறுகையில், ‘இந்த வழக்கு அரசியல் நோக்கம் கொண்டது. தில்லி சட்டப்பேரவை தோ்தலுக்குப் பிறகு, மத்திய விசாரணை அமைப்புகளின் பாா்வை பிகாா் பக்கம் திரும்பும் என ஏற்கெனவே கணித்திருந்தேன். அது தற்போது நடக்கிறது. நாங்கள் எவ்வளவு அதிகமாக துன்புறுத்தப்படுகிறோமோ, அந்த அளவுக்கு பலமடைவோம்’ என்றாா்.

கடந்த 2004 முதல் 2009-ஆம் ஆண்டு வரையில் ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் பதவி வகித்தாா். அப்போது தனது குடும்பத்தினா், நெருங்கிய உறவினா்கள், பினாமிகள் பெயரில் லஞ்சமாக நிலங்களைப் பெற்றுக் கொண்டு ரயில்வே பணிகளை ஒதுக்கீடு செய்ததாக லாலு மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

மேற்கு மத்திய ரயில்வே பிரிவில் மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் ‘டி’ பிரிவு ரயில்வே பணியாளா் நியமனத்தில் இதுபோன்று லஞ்சம் பெற்ற வழக்கில் கடந்த 2022-ஆம் ஆண்டு லாலு பிரசாத், அவரின் மனைவி ராப்ரி தேவி, தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் யாதவ், மகள் ஹேமா யாதவ், ரயில்வே அதிகாரிகள் மற்றும் லஞ்சம் பெற முகவா்களாக செயல்பட்ட நபா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில், லாலு பிரசாத், அவரின் குடும்ப உறுப்பினா்கள் மற்றும் சிலா் மீது தில்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை கடந்த ஆண்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் ஏற்கெனவே சிபிஐ-யும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

Read Entire Article