ARTICLE AD BOX
ரயில்வே நிறுவன பங்கில் பணத்தை கொட்டிய LIC.. இதை கவனிங்க..!!
மத்திய அரசுக்கு சொந்தமான எல்ஐசி நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம். இந்நிறுவனம் மிகப்பெரிய பங்குச் சந்தை முதலீட்டாளரும் கூட. எல்ஐசி நிறுவனம் பங்குச் சந்தையில் முதலீடு செய்தும் நல்ல லாபம் சம்பாதித்து வருகிறது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் நல்ல பங்குகளை தேர்வு செய்து முதலீடு செய்து வருமானம் ஈட்டி வருகிறது. அந்த வகையில், எல்ஐசி நிறுவனம் பொதுத்துறை நிறுவனமான கண்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவன பங்கில் முதலீடு செய்துள்ளது.
இந்தியன் ரயில்வேயால் நிர்வகிக்கப்படும் ஒரு பொதுத்துறை நிறுவனம் கண்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா. இந்நிறுவனம் சரக்கு போக்குவரத்து மற்றும் தளவாடங்களை ரயில் மூலம் கொண்டு கொண்டு செல்வதில் அனுபவம் வாய்ந்த நிறுவனமாகும். தொடர்ந்து நல்ல லாபம் ஈட்டி வரும் அரசு நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும்.
இந்நிறுவனம் கடந்த செப்டம்பர் காலாண்டில் நிகர லாபாக ரூ.371 கோடியும், வருவாயாக ரூ.2,283 கோடியும் ஈட்டியுள்ளது. இந்நிறுவனத்தின் நிதி செயல்திறன் சிறப்பாக உள்ளதால் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களை ஈர்ப்பதாக உள்ளது.
மத்திய அரசு பிப்ரவரி 1ம் தேதி அடுத்த நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. மத்திய பட்ஜெட்டில் ரயில்வேக்கான ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால், ரயில்வே துறையை சேர்ந்த பல நிறுவன பங்குகளின் விலை உயர்ந்து வருகிறது.
முதலீட்டாளர்கள் அதிகளவில் இத்துறையை சேர்ந்த பங்குகளில் முதலீட்டை அதிகரித்து வருவதே இதற்கு காரணம். எல்ஐசி நிறுவனமும் சமீபகாலமாக கண்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவன பங்குகளை வாங்கி குவித்து வருகிறது. 2024 செப்டம்பரில் எல்ஐசி நிறுவனம் கண்டெய்னர் கார்ப்பஷேன் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் 4.74 கோடி பங்குகளை வைத்திருந்தது. இது அந்நிறுவனத்தின் மொத்த பங்கில் 7.78 சதவீதமாகும்.
இந்நிலையில், எல்ஐசி நிறுவனம் கடந்த செப்டம்பர் 6ம் தேதி முதல் கடந்த 21ம் தேதி வரையிலான காலத்தில் கண்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் தனது பங்கு மூலதனத்தை 2.08 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனையடுத்து அந்நிறுவனத்தில் எல்ஐசியின் பங்கு மூலதனம் 9.80 சதவீதமாக அல்லது 5.97 கோடி பங்குகளாக உயர்ந்துள்ளது.
நடப்பு ஜனவரி மாதத்தில் மட்டும் எல்ஐசி அந்நிறுவனத்தின் 40 லட்சம் பங்குகளை வாங்கியுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று கண்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவன பங்கின் விலை ரூ.755.45ல் முடிவுற்றது. அந்த விலையின் அடிப்படையில் பார்த்தால், எல்ஐசி வசம் உள்ள அந்நிறுவனத்தின் ஒட்டு மொத்த பங்குகளின் மதிப்பு ரூ.4,515 கோடியாகும்.
Story written by: Subramanian