ரயில்வே துறையிலும் பாஜக அரசு பாரபட்சம் காட்டுகிறது: மக்களவையில் நவாஸ்கனி எம்.பி புகார்

5 hours ago
ARTICLE AD BOX

Published : 18 Mar 2025 03:52 PM
Last Updated : 18 Mar 2025 03:52 PM

ரயில்வே துறையிலும் பாஜக அரசு பாரபட்சம் காட்டுகிறது: மக்களவையில் நவாஸ்கனி எம்.பி புகார்

கோப்புப் படம்
<?php // } ?>

புதுடெல்லி: “மத்திய அரசு சார்பில் தெற்கு ரயில்வேக்கு ரூ.6,626 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது, ஆனால் வடக்கு ரயில்வேக்கு ரூ.14,745 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஏன் இந்த பாரபட்சம்” என ரயில்வே துறை மானியக் கோரிக்கையில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் துணைத்தலைவர் கே.நவாஸ்கனி கேள்வி எழுப்பினார்.

இது குறித்து ராமநாதபுரம் மக்களவை தொகுதி எம்பியான கே.நவாஸ்கனி பேசியதாவது: ரயில்வே துறைக்கு என்று தனியாக இருந்த நிதிநிலை அறிக்கையை ஒழித்து விட்டு, இப்போது மானிய கோரிக்கையாக விவாதிக்க கூடிய ஒரு நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது, இது, ரயில்வே துறையை எந்த அளவிற்கு பின்னோக்கி இழுத்துச் சென்று கொண்டிருக்கின்றது என்பதை உணர்த்துகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட ரயில் விபத்துகள் நாடு முழுவதும் நடந்துள்ளன. கிட்டத்தட்ட 351 பேர் உயிரிழந்துள்ளார்கள், 970 பேர் காயமடைந்திருக்கிறார்கள்,

கடந்த 2024 முதல் 5 மாதங்களில் மட்டும் 18 ரயில் விபத்துகள் பதிவாகி இருக்கின்றன, இத்தகைய விபத்துகளின் மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ரயில்வேக்கு கிட்டத்தட்ட ரூ.313 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. தொழில்நுட்பங்கள் மாபெரும் வளர்ச்சி அடைந்திருக்கும் இந்த காலகட்டத்தில் இத்தனை ரயில் விபத்துகள் ஏற்பட்டு நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். பாஜக அரசின் பாரபட்சமான பார்வை ரயில்வே துறைக்கும் விதிவிலக்கல்ல என்பதை உணர்த்துகின்றது.

தெற்கு ரயில்வேக்கு ரூ.6,626 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது, ஆனால் வடக்கு ரயில்வேக்கு ரூ.14,745 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஏன் இந்த பாரபட்சம் என்று கேட்கின்றோம். தமிழ்நாட்டின் தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மானாமதுரையில் இருந்து அபிராமம் பார்த்திபனூர் கமுதி சாயல்குடி வழியாக தூத்துக்குடி வரை புதிய ரயில் பாதை அமைக்கப்பட வேண்டும். ஏற்கெனவே நாங்கள் தொடர்ந்து இந்த கோரிக்கையை முன்வைத்து வருகின்றோம்.

சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு இந்த புதிய ரயில் பாதை வழியாக ரயில்கள் இயக்கப்பட்டால், தென் மாவட்ட மக்கள் பெரிதும் பயனடைவார்கள், இதேபோல காரைக்கால் பகுதியில் இருந்து தூத்துக்குடி வரை கிழக்கு கடற்கரை சாலை மார்க்கமாக ஏற்கெனவே திட்டமிடப்பட்ட ரயில்வே வழித்தட திட்டத்தை மீண்டும் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் பணியமர்த்தப்படும் ரயில் நிலைய ஊழியர்கள் நிச்சயமாக அந்தந்த பிராந்திய மொழிகளை கற்றுத் தெரிந்திருக்க வேண்டியதை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

அவர்களை அணுகும் அடித்தட்டு மக்கள் அவர்களுக்கான தேவைகளை கேட்டு பெறுவதற்கு இந்தி கற்க முடியாது. இதுவும் ஒரு வகையிலான உங்களின் மொழி திணிப்பு என்று பார்க்கப்பட வேண்டியிருக்கிறது. எனவே, தமிழ் தெரிந்தவர்களை தமிழ்நாட்டில் நியமிக்க வேண்டும். பாம்பன் ரயில் பாலம் எப்போது தான் திறக்கப்படும் என்று எங்களுடைய மாவட்ட மக்கள் எதிர் நோக்கி காத்திருக்கின்றார்கள்.

கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாம்பன் ரயில் பால பணிகளுக்காக ராமேசுவரத்திற்கு செல்லக்கூடிய ரயில்கள் நிறுத்தப்பட்டு மண்டபம் வரை மட்டுமே இப்போது ரயில் இயக்கப்படுகிறது. இது ராமேசுவரம் வரை செல்லும் பொதுமக்களுக்கும் ராமேஸ்வரம் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் கடந்து விட்டது. பிரதமரின் நேரத்திற்காக காத்திருப்பதாக செய்திகள் வெளியாகிறது, நீங்கள் காலதாமதம் செய்வதால் ஆயிரக்கணக்கான மக்கள் பெரும் துயரத்தை சந்தித்து கொண்டிருக்கிறார்கள். உடனடியாக அந்த பாம்பன் ரயில் பாலத்தை திறக்க வேண்டும்.அதே நேரத்தில் அந்த புதிய ரயில் பாலத்தில் அதிர்வுகள் இருப்பதாகவும் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாகவும், ரயில்வே அதிகாரிகளே தெரிவித்தனர். அதையெல்லாம் சரி செய்துவிட்டு மக்களின் அச்சத்தை போக்கிவிட்டு துவங்க வேண்டும். அந்த பகுதியினுடைய மீனவர்கள் மிகப்பெரிய சோகத்தில் கண்ணீரோடு அங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு அவர்களின் படகுகள் எல்லாம் பறிமுதல் செய்யப்பட்டு பாதிக்கப்படுகிறார்கள். அதனை எல்லாம் மீட்டுக் கொடுத்து, மீனவர்களை விடுதலை செய்து மீனவர்களின் துயரங்களை போக்கிவிட்டு அங்கு வந்து பிரதமர் பாலத்தை திறந்து வைத்தால், மீனவர்கள் அவர்களை மகிழ்ச்சியாக வரவேற்பார்கள். பாம்பன் பாலத்தையும் காஷ்மீரில் அமைந்துள்ள உயரமான செனாப் ரயில்பாலத்தை இணைக்கும் வகையில் அம்ரித் பாரத் ரயிலை அறிமுகம் செய்ய வேண்டும்.

ராமேஸ்வரம் மதுரை இடையே இரட்டை ரயில் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை-ராமேஸ்வரம் இடையே இரு மார்க்கமும் திருச்சி, விருத்தாசலம் வழியாக பகல் நேர விரைவு வண்டி, தினசரி இன்டர்சிட்டி வகை ரயிலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமேஸ்வரம்- மதுரை பயணிகள் ரயிலை மூன்று முறை இயக்க வேண்டும், ராமேஸ்வரம் - கன்னியாகுமரி (22621/22622) இரு மார்க்கமும் ரயில்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீட்டர்கேஜ் முறையில் இயக்கப்பட்டு வந்த ரயில்களை பிராட் கேஜ் முறையில் மாற்றப்படும்போது நிறுத்தப்பட்டிருந்த வழித்தடங்களில் மீண்டும் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமேஸ்வரம்- கோயம்புத்தூர், மதுரை, பழனி, பொள்ளாச்சி வழியாக இரு மார்க்கமும், ராமேஸ்வரம் - பாலக்காடு பயணிகள் வண்டி இரு மார்க்கமும், ராமேஸ்வரம் - திருச்சி இரவு நேர பயணிகள் வண்டி இரு மார்க்கமும் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை - ராமேஸ்வரம், ராமேஸ்வரம் - திருப்பதி அந்தியோதயா விரைவு வண்டிகளையும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். திருவனந்தபுரம் - மதுரை புனலூர் - பாலக்காடு ஆகிய விரைவு வண்டிகளை ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். ராமேஸ்வரம் திருப்பதி (16779/16780) விரைவு வண்டி அதிகமாக பக்தர்கள் பயன்படுத்தக்கூடிய வழித்தடம். தற்போது வாரம் மூன்று முறை இயக்கப்பட்டு வரும் இந்த வண்டியை தினசரி வண்டியாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னையில் இருந்து செங்கோட்டை வரை இயக்கப்படக்கூடிய சிலம்பு விரைவு வண்டியை தினசரி வண்டியாக மாற்ற வேண்டும். அந்த ரயில் திருச்சுழி மற்றும் நரிக்குடி பகுதியில் நிறுத்தங்கள் தொடர்ந்து கேட்டு வருகின்றோம், அங்கு அந்த ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வட மாநிலங்களிலிருந்து ராமேஸ்வரத்திற்கு இயக்கப்படும் ரயில்களை மதுரை வழியாக இயக்கினால் கூடுதல் வருவாயை ஈட்டித்தரும். பொது மக்களும் அதிகம் அதன் மூலம் பயனடைய முடியும்.

எனவே, மதுரை வழியாக விரைவு வண்டிகளை இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமநாதபுரம், பரமக்குடி, மண்டபம், மற்றும் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி மற்றும் திருச்சுழி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பல்வேறு ரயில்கள் நின்று செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு இரண்டு ரயில்கள் இயக்கப்படுகின்றன, ஆனால் இரண்டு ரயில்களிலும் பெட்டிகள் மிக பழைய பெட்டிகளாக அமைந்துள்ளது.

அது பயணிகளுக்கு பல்வேறு அசவுகரித்தை தரக்கூடியதாக அமைந்திருக்கிறது. இதனை புதிய பெட்டிகளாக மாற்ற வேண்டும் என நெடு நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றோம். எனவே சென்னையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு இயக்கப்படும் ரயில்களுக்கு புதிய பெட்டிகள் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Read Entire Article