ARTICLE AD BOX

தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனத்திலும், மது ஆலைகளிலும் ரூ.1,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை (ED) குற்றச்சாட்டு எழுப்பியதை தொடர்ந்து, இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிர்ப்பாக நேற்று பாஜக சார்பில் சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமையகம் முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கையாக, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர். போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் உட்பட பலர் மாலை 6 மணிக்கு மேல் கூட விடுவிக்கப்படவில்லை, இதனால் பாஜக தொண்டர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், சென்னை வளசரவாக்கத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழிசை சவுந்தரராஜன், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவர், “மாலை 6 மணிக்குப் பிறகு பெண்களை காவலில் வைத்திருப்பது சட்டப்படி தவறு” என்று கூறியுள்ளார். இதற்கிடையில், போராட்டத்தில் இருந்த ஒரு பெண் மயங்கி விழுந்ததால், தமிழிசை உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாங்கள் பயங்கரவாதிகளா? என்னை கைது செய்யலாம், ஆனால் என் கட்சியின் பெண்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்” எனக் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம், தமிழக அரசியல் சூழலில் கடும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. பாஜக தலைவர்கள் தங்கள் போராட்டம் குறித்து “நீதிமன்றத்தில் செல்ல தயாராக இருக்கிறோம்” என தெரிவித்துள்ளனர். மேலும் அரசு மற்றும் காவல்துறை நடவடிக்கைக்கு எதிராக பாஜக ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.