ARTICLE AD BOX

ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்த ‘ஜெயிலர்’ படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து அதன் இரண்டாம் பாகம் இப்போது உருவாகி வருகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் கடந்த 10-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் இந்தப் படத்தில், ரஜினி மனைவியாக நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி மலையாள குணசித்திர நடிகை ஷைனி சாராவிடம் மோசடி முயற்சி நடந்துள்ளது. இதுபற்றி நடிகை மாலா பார்வதியிடம் பேசிய வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார் ஷைனி சாரா.அதில், ‘ரஜினிகாந்தின் மனைவியாக நடிக்க நீங்கள் தேர்வாகி இருக்கிறீர்கள் என்று எனது வாட்ஸ் ஆப்பில் செய்தி ஒன்றுவந்தது. அதை நம்பினேன். பிறகு உங்களிடம் நடிகர் சங்க உறுப்பினர் கார்டு இருக்கிறதா? என்று கேட்டார்கள். இல்லை என்றேன். நாங்கள் அதற்கு ஏற்பாடு செய்கிறோம் என்று சொன்னார் மெசேஜில் வந்தவர். பிறகு சுரேஷ்குமார் என்பவர் உங்களிடம் பேசுவார் என்றார். இரண்டு நாள் கழித்து சுரேஷ்குமார் என்பவர், சேலை அணிந்து வீடியோ காலில் வரும்படி கூறினார். சென்றேன். பார்த்துவிட்டு நீங்கள் ரஜினிகாந்த் மனைவியாக நடிக்கத் தேர்வாகி விட்டீர்கள் என்றார். முதல் பாகத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தாரே, பிறகு என்னை எப்படி நடிக்க வைப்பீர்கள்?’ என்று கேட்டேன். ‘உங்களை இன்னொரு கதாபாத்திரத்துக்குத் தேர்வு செய்துள்ளோம்’ என்று கூறிவிட்டு, நடிகர் சங்க உறுப்பினர் கார்டுக்காக ரூ.12,500 அனுப்புமாறு கேட்டார். அவர் மீது சந்தேகம் ஏற்பட்டதால் 2 நாட்களில் தருகிறேன் என்றேன். அவர் முதல் தவணையாகக் கொஞ்சம் அனுப்புங்கள் என்றதும் சந்தேகம் வலுத்தது. பிறகு போனை ஆஃப் செய்துவிட்டு, சக நடிகைகளிடம் விசாரித்தேன். படங்களில் நடிக்க நடிகர் சங்க உறுப்பினர் அட்டை வேண்டும் என்ற அவசியமில்லை என்றார்கள். நான் மீண்டும் அந்த நபரின் எண்ணுக்குத் தொடர்பு கொண்டபோது போன் ஆஃப் ஆகி இருந்தது” என்று கூறியுள்ள அவர், ‘இப்படியெல்லாம் மோசடி நடக்கிறது, எச்சரிக்கையாக இருங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.
The post ரஜினிகாந்த் மனைவியாக நடிக்க வைப்பதாக கூறி பண மோசடி- பிரபல நடிகை “பகீர்”…! appeared first on Rockfort Times.