ARTICLE AD BOX
சமீபத்தில் ஓய்வுபெற்ற சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் அஸ்வினுக்கு மாற்றுவீரராக யார் இருக்கப்போகிறார்கள் என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு விடையாய் வந்தவர் தான், தனுஷ் கோட்டியான்.
வலது கை ஆஃப் பிரேக் ஸ்பின்னரான இவர், பேட்டிங்கிலும் ஒரு தரமான திறமைக்கு சொந்தக்காரராக இருக்கிறார். 9வது வீரராக களத்திற்கு வந்து 2 முதல் தர சதங்களையும், 14 அரைசதங்களையும் அடித்திருக்கும் கோட்டியான், பந்துவீச்சிலும் 3 ஃபைவ் விக்கெட் ஹாலையும் வைத்திருக்கிறார். அவருடைய பந்துவீச்சு சராசரி 25ஆக இருக்கிறது. பேட்டிங்கில் 9வது வீரராக விளையாடி 42 சராசரியை கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் இந்திய அணியின் கேப்பை பெற்றாலும் அவர் இன்னும் இந்திய அணிக்காக அறிமுகமாகாமல் இருந்துவருகிறார்.
இந்த நிலையில், ரஞ்சிக்கோப்பையில் தொடர்ந்து மும்பை அணிக்காக தன்னுடைய பங்களிப்பை கொடுத்து ஆச்சரியப்படுத்திக்கொண்டே இருக்கிறார்.
காலிறுதியில் காப்பாற்றிய கோட்டியான்..
2024-2025ஆம் ஆண்டுக்கான ரஞ்சிக் கோப்பை எலைட் போட்டிகள் நடந்துவருகின்றன. இன்று தொடங்கிய காலிறுதிப்போட்டியில் மும்பை மற்றும் ஹரியானா அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.
பரபரப்பாக தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியில், தொடக்க வீரர் ஆயுஸ் மித்ரே 0, சித்தேஷ் 4, ஆகாஷ் 10, சூர்யகுமார் 9, ரஹானே 31 என டாப் ஆர்டர் வீரர்கள் சீட்டுகட்டை போல விக்கெட்டை சரியவிட்டனர்.
25/4, 113/7 என மும்பை அணி தடுமாறிய நிலையில் 9வது வீரராக பேட்டிங்கிற்கு வந்த தனுஷ் கோட்டியான், ஷாம்ஸ் முலானியுடன் இணைந்து 165 ரன்கள் 8வது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் போட்டார். முலானி 91 ரன்னில் அவுட்டான நிலையில், தனுஷ் கோட்டியான் 85 ரன்களுடன் மும்பை அணிக்காக போராடிவருகிறார்.
எப்போதெல்லாம் மும்பை அணி பேட்டிங்கில் ஒரு பெரிய சரிவை சந்திக்கிறதோ அப்போதெல்லாம், அவ்வணியை மீட்கும் காப்பானாக் கோட்டியான் செயல்பட்டு வருகிறார். இவரிடம் இருக்கும் சிறப்பம்சமே இவரால் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஒரு பியூர் பேட்ஸ்மேனை போல கிரிக்கெட் ஷாட்களை விளையாட முடியும், அதே நேரத்தில் ஸ்பின்னர்களையும் டாமினேட் செய்ய முடியும். 26 வயதாகும் இவர் இந்திய அணி தேடிக்கொண்டிருக்கும் ஆல்ரவுண்டர் ஆப்சன்களில் சிறந்த தேர்வாக இருப்பார்.
முதல் நாள் ஆட்டம் முடிவில் 278/8 என்ற நிலையில் மும்பை முடித்துள்ளது.