ARTICLE AD BOX
ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புதின் உள்ளார். இவர், அண்டை நாடான உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதன் மீது போர் தொடுத்தார். இந்தப் போர் 3 ஆண்டுகளைக் கடந்தும் நடைபெற்று வருகிறது. இந்தப் போருக்கு ஆதரவு தெரிவித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் பலரும் அந்நாட்டில் பதிவுகளையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அதிபர் புதினை, ‘முட்டாள்’ எனச் சொன்ன அந்நாட்டுப் பாடகர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
ரஷ்யாவின் ஊரால்ஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வடிம் ஸ்ட்ரோய்கின். பாடகரான இவர், உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை தொடர்ந்து விமர்சித்து வந்துள்ளார். அப்போது அவர், அதிபர் புதினை ‘முட்டாள்’ எனக் கூறியதுடன் அவரது செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சித்தும் வந்துள்ளார். மேலும், அவர் உக்ரைன் ராணுவத்தை ஆதரித்தது மற்றும் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்தது ஆகிய குற்றங்களுக்காக அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி, அட்மிரால்டிஸ்கி மாவட்டத்தில் உள்ள அவரது செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவரது வீட்டின் சமையலறையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் புதினை விமர்சித்த ரஷ்ய நடனக் கலைஞரான விளாடிமிர் ஷ்க்ளியாரோவ் என்பவர் ஒரு கட்டடத்தின் 5வது தளத்திலிருந்து மர்மமான முறையில் கீழே விழுந்து பலியானார். அவரது மரணத்தை விபத்தாக பதிவு செய்த அந்நாட்டு அதிகாரிகள் அதிகப்படியான வலி நிவாரணி மாத்திரைகளை அவர் சாப்பிட்டதினால் இந்த விபத்து ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக குறிப்பிட்டிருந்தனர்.