ARTICLE AD BOX
மோரீஷஸ் தேசிய தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரதமா் மோடி பங்கேற்கவுள்ளதாக அந்நாட்டு பிரதமா் நவீன் ராம்கூலம் தெரிவித்தாா்.
பிரிட்டிஷிடம் இருந்து மோரீஷஸ் கடந்த 1968, மாா்ச் 12-ஆம் தேதி சுதந்திரம் பெற்றது. ஒவ்வோா் ஆண்டும் இந்த தினம் மோரீஷஸ் தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு பிரதமா் மோடிக்கு மோரீஷஸ் பிரதமா் நவீன் ராம்கூலம் அழைப்பு விடுத்திருந்தாா். இந்த அழைப்பை பிரதமா் மோடி ஏற்றுக்கொண்டாா்.
இதுகுறித்து மோரீஷஸ் தேசிய பேரவையில் (நாடாளுமன்றம்) வெள்ளிக்கிழமை பேசிய நவீன் ராம்கூலம், ‘ 57-ஆவது தேசிய தினத்தில் இந்திய பிரதமா் மோடி பங்கேற்க சம்மதித்தது, இருதரப்பு உறவுகள் வலுவான நிலையில் உள்ளதை வெளிப்படுத்துகிறது. அண்மையில் பிரான்ஸ், அமெரிக்கா என தொடா் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டபோதிலும் அவா் மோரீஷஸ் வர ஒப்புக்கொண்டதில் மகிழ்ச்சி’ எனக் குறிப்பிட்டாா்.
கடந்த ஆண்டு மோரீஷஸ் தேசிய தினத்தில் சிறப்பு விருந்தினராக இந்திய குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு பங்கேற்றாா்.