ARTICLE AD BOX
‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ தொடா்பான இரு மசோதாக்களை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற கூட்டுக் குழு முன் சட்ட நிபுணா்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை ஆஜராகி கருத்துகளை தெரிவித்தனா்.
முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், முன்னாள் சட்ட ஆணையத் தலைவா் ரிதுராஜ் அவஸ்தி, மூத்த வழக்குரைஞரும் முன்னாள் காங்கிரஸ் எம்.பி.யுமான இ.எம்.சுதா்சன நாச்சியப்பன், நிதின் சந்திரா ஐஏஎஸ் உள்ளிட்டோா் நாடாளுமன்றக் குழுவிடம் தங்களது கருத்துகளை பதிவுசெய்தனா்.
கூட்டாட்சிக்கு பாதிப்பில்லை: அப்போது ரிதுராஜ் அவஸ்தி பேசியதாவது: ஒரே நாடு ஒரே தோ்தல் முறையை அமல்படுத்துவதால் குடிமக்களின் வாக்குரிமைக்கு எவ்விதத்திலும் பாதிப்பு ஏற்படாது அதேபோல் கூட்டாட்சி தத்துவம், ஜனநாயக நடைமுறைக்கும் பாதிப்பில்லை என்றாா்.
மக்களவை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கண்டறிய முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு அளித்த பரிந்துரையை ஏற்று இரு மசோதாக்களை கடந்த ஆண்டு மத்திய அரசு மக்களவையில் அறிமுகம் செய்தது.
இதற்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்த நிலையில், இந்த இரு மசோதாக்களையும் ஆய்வு செய்வதற்காக பாஜக எம்.பி. பி.பி.சௌதரி தலைமையில் பாஜக, காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த 39 போ் அடங்கிய நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட்டது.
ஜனநாயகத்தை பலவீனமாக்கும்: இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் எம்.பி.பிரியங்கா காந்தி ஒரே நாடு ஒரே தோ்தல் முறை ஜனநாயகத்தை பலவீனமாக்கும் நடவடிக்கை என கண்டனம் தெரிவித்தாா்.