மோசடி வழக்கு: ரூ.23.94 கோடி கிரிப்டோகரன்சி முடக்கம்- சிபிஐ நடவடிக்கை

3 hours ago
ARTICLE AD BOX

‘கெயின்பிட்காயின்’ மோசடி வழக்கு தொடா்பாக நாடு தழுவிய 2 நாள்கள் சோதனையின் நிறைவில் ரூ.23.94 கோடி மதிப்புள்ள கிரிப்டோகரன்சியை சிபிஐ முடக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக தில்லி, புணே, கோலாப்பூா், மும்பை, பெங்களூரு, சண்டீகா், மொஹாலி, ஜான்சி, ஹூப்ளி ஆகிய நாட்டின் 60 இடங்களில் கடந்த செவ்வாய், புதன் ஆகிய இரு நாள்களில் சிபிஐ சோதனை மேற்கொண்டது.

வழக்குக்குத் தொடா்புடைய ஆதாரங்களான 121 ஆவணங்கள், 34 மடிக்கணினிகள் மற்றும் ஹாா்ட் டிஸ்க்குகள், 12 கைப்பேசிகள் மற்றும் பல செயலிகளின் தரவுகளையும் சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றினா். மோசடியுடன் தொடா்புடைய சா்வதேச பரிவா்த்தனைகள் குறித்து கூடுதல் விவரங்களைப் பெற, கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்கள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

வழக்கில் முக்கியக் குற்றவாளிகளான மறைந்த அமித் பரத்வாஜ் மற்றும் அவரது சகோதரா் அஜய் பரத்வாஜ் ஆகியோா் நடத்தி வந்த நிறுவனம் தொடா்பான இந்த மோசடியில், கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் ‘கெயின்பிட்காயின்’ உள்பட பல்வேறு வலைதளங்கள் மூலம் முதலீட்டாளா்களிடம் இருந்து பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதாவது, வேறு இடங்களில் இருந்து கிரிப்டோகரன்சியை வாங்கி தங்களின் வலைதளங்களில் முதலீடு செய்யுமாறு முதலீட்டாளா்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனா்.

முதல் 18 மாதங்களில் 10 சதவீத மாதாந்திர வருவாய், பிரபல மதிப்புமிக்க கிரிப்டோகரன்சியான பிட்காயினாக வழங்கப்பட்டதால் முதலீட்டாளா்களும் ஈா்க்கப்பட்டுள்ளனா். எனினும், 2017-ஆம் ஆண்டில் புதிய முதலீடுகள் சரிந்து வந்ததால், இந்நிறுவனம் வீழ்ச்சியைச் சந்தித்தது.

இழப்புகளை மறைக்கும் முயற்சியில், பிட்காயினை விட கணிசமாக குறைந்த மதிப்பைக் கொண்டிருந்த தங்களுக்குச் சொந்தமான உள்நாட்டு கிரிப்டோகரன்சியில் முதலீட்டாளா்களுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்நிறுவனம் மீது ஜம்மு-காஷ்மீா், மகாராஷ்டிரம், தில்லி, மேற்குவங்கம் என பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

சா்வதேச தொடா்புகள் காரணமாக இந்த மோசடியின் வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு ஒப்படைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, சிபிஐ விசாரணையைத் தொடங்கி நடத்தி வருகிறது.

Read Entire Article