ARTICLE AD BOX
மகாராஷ்டிர வேளாண்துறை அமைச்சர் மாணிக்ராவ் கோகடேவுக்கு 1995 ஆம் ஆண்டு பதியப்பட்ட மோசடி வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நாசிக் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிர வேளாண்துறை அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான மாணிக்ராவ் கோகடே, அவரது சகோதரர் சுனில் கோகடே ஆகியோர் 1995 ஆம் ஆண்டு அரசு ஒதுக்கீட்டின் கீழ் அடுக்குமாடி குடியிருப்புகளைப் பெறுவதற்காக போலி ஆவணங்களைச் சமர்ப்பித்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா ரூ.50,000 அபராதம் விதித்து நாசிக் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1995 ஆம் ஆண்டு, முதலமைச்சரின் 10% ஒதுக்கீட்டின் கீழ், யோலாகர் மாலா பகுதியில் உள்ள கல்லூரி சாலையில் குறைந்த வருமானம் கொண்ட பிரிவினருக்கு (எல்ஐஜி) இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டது. அதற்கு தகுதி பெற தங்களை எல்ஐஜி பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும் நகரத்தில் சொந்தமாக வீடு இல்லை என்றும் கோகடே சகோதரர்கள் மோசடி செய்து குடியிருப்பைப் பெற்றுள்ளனர்.
இதையும் படிக்க | தில்லி முதல்வர், அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள்!
இதில் மறைந்த முன்னாள் அமைச்சர் டி.எஸ். டிகோலே புகாரின் பேரில், கோகடே சகோதரர்கள் மற்றும் மேலும் இரண்டு பேர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் மோசடி மற்றும் பிற குற்றங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
“நீதிமன்றம் எனக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளேன். சட்டத்தின்படி அனைத்தையும் எதிர்கொள்வோம்" என்று கோகடே செய்தியாளர்களிடம் கூறினார்.
இவர்களுடன் குற்றம் சாட்டப்பட்ட மேலும் இரண்டு பேரை நீதிமன்றம் விடுவித்தது. இந்தக் குற்றச்சாட்டில் உயர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு நிரூபணமானால் கோகடே எம்.எல்.ஏ. பதவியை இழக்க நேரிடும்.
தீர்ப்பைத் தொடர்ந்து கோகடே ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மகாராஷ்டிரத்தில் பாஜக தலைமையிலான அரசு அமைந்த பின்னர் கூட்டணி கட்சியான என்சிபி கட்சியில் இவ்வாறு தண்டனை பெற்றுள்ள இரண்டாவது அமைச்சர் இவர் என்பது குற்ப்பிடத்தக்கது.