ARTICLE AD BOX
மேட்டூர் அனல்மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில், தொழிலாளர்களின் பணி நிரந்தர கோரிக்கைக்கு தமிழ்நாடு அரசு செவி சாய்க்க வேண்டும் என த. வா.க. தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
”சேலம் மாவட்டம் மேட்டூரில் 840 மற்றும் 600 மெகாவாட் கொண்ட 2 அனல் மின் நிலையங்கள் இயங்கி வருகிறது. இதில் நாளொன்றுக்கு 1,440 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. 2 அனல் மின் நிலையங்களிலும் நிலக்கரி கையாளும் பிரிவு, மின் உற்பத்தி பிரிவு, சாம்பல் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 1,500-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள், நீண்ட காலமாக பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 28.02.2025 அன்று முதல் தங்களது பணியை புறக்கணித்து பணி நிரந்தரம் செய்யக்கோரி, ஒப்பந்த தொழிலாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, அனல் மின் நிலையம் எதிரே உள்ள மின் கம்பத்தில் ஏறி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திமுக அரசு, கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது, 153வது பிரிவில் மின் கழக ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றாததால் தான், மேட்டூர் அனல்மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதற்கான காரணமாகும்.
ஏற்கனவே, கடந்த காலங்களில் இந்த ஒப்பந்த தொழிலாளர்கள் ஒன்றிணைந்து, வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம், நிர்வாக அலுவலக முற்றுகை, உண்ணாவிரதம் எனப் பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை நடத்திய போதிலும், அவர்களின் கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. அப்போராட்டங்கள் தோல்விலேயே முடிந்துள்ளது.
முக்கியமாக, மின்சார வாரியத்தில் 2 ஆண்டுகளில் 480 நாட்கள் தொடர்ந்து பணியாற்றிய ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்பது விதியாகும். இதுதொடர்பான சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு இருக்கிறது. ஆனால், கடந்த காலங்களில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு செயல்படுத்தப்படவில்லை.
எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் படியும், கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது அளித்த வாக்குறுதியின் படியும், மேட்டூர் அனல்மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று, அத்தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு பிரிவுகளில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணியாற்றி வரும் அனைவரையும் அவர்கள் பணி நிரந்தரம் செய்ய தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.” என்று வேல்முருகனின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.